Wednesday, June 2, 2010

தான் வாழ்ந்த வீட்டை தானமாக கொடுத்தார் நமது முதல்வர்

மருத்துவமனையாக பயன்படுத்த    கோபாலபுரம் வீட்டை    கருணாநிதி,இன்று    தானமாக வழங்கினார்:     அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு

முதல்- அமைச்சர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 55 ஆண்டுகளாக அவர் அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் “கலைஞர் காப்பீட்டு திட்டம்” தொடக்க விழா நடந்தபோது, கோபாலபுரம் வீட்டை மக்களுக்காக தானமாக வழங்க அவர் விருப்பம் தெரிவித்தார்.

அந்த விழாவில் முதல் -அமைச்சர் கருணாநிதி பேசுகையில், நான் வாழும் கோபாலபுரம் வீட்டை எனது காலத்துக்குப் பிறகு தமிழக அரசிடமோ, அல்லது அறக்கட்டளைக்கோ தானமாக வழங்க விரும்புகிறேன். இந்த வீட்டில் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பது எனது ஆசையாகும். ஏழை-எளிய மக்களுக்கு இங்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றார்.

முதல்- அமைச்சர் கருணாநிதி தன் தூய உழைப்பால் வாங்கிய, வரலாற்றுப் பெருமைக்குரிய கோபாலபுரம் இல்லத்தை தன் வாரிசுகளுக்கு வழங்காம ல் ஏழை-எளிய மக்களுக்காக வழங்கியதை மிகப்பெரிய அருஞ்செயல் என்று நாடெங்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.


இந்தியாவில் இதுவரை எந்த மாநில முதல்- அமைச்சரும் தான் வசிக்கும் வீட்டையே தானமாக கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்- அமைச்சர் கருணாநிதியின் இந்த மனிதநேய நடவடிக்கையை அவரது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதோடு சில மாதங்களுக்கு முன்பு அதற்கான ஒப்புதல் பத்திரத்திலும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி நாளை (வியாழன்) தன் 87-வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார். இதையொட்டி கோபாலபுரம் வீட்டை முறைப்படி தானம் செய்ய தீர்மானித்தார். இதற்காக அவர், அன்னை அஞ்சுகம் அறக்கட்டளையை உருவாக்கினார்.

அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், சி.கே.ரங்கநாதன், கவிஞர் வைரமுத்து, மத்திய மந்திரிகள் ஆ.ராசா, எஸ்.ஜெகத்ரட்சகன் நியமனம் செய்யப்பட்டனர். இந்த அறக்கட்டளையிடம் கோபாலபுரம் வீட்டை ஒப்படைக்க இன்று பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

கோபாலபுரம் இல்லத்திலேயே பத்திரப்பதிவு நிகழ்ச்சி நடந்தது. முதல்- அமைச்சர் கருணாநிதி காலை 9.45 மணிக்கு தானப்பத்திரத்தில் கையெழுத்துப் போட்டார். இதன் மூலம் கோபாலபுரம் இல்லம் அதிகாரப்பூர்வமாக இன்று அன்னை அஞ்சுகம் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பத்திரத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை முதல்- அமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் வாசித்தார்.


அதன் விவரம் வருமாறு:-

முதல்-அமைச்சர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தை 1955-ம் ஆண்டு சர்வேசுவர அய்யர் என்பவரிடம் இருந்து வாங்கினார். 1968-ம் ஆண்டு தன் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய 3 பேர் பெயரில் இந்த வீட்டை கருணாநிதி எழுதி வைத்தார்.

கடந்த ஆண்டு அவர் இந்த வீட்டை ஏழை- எளிய மக்கள் பயன்பெற மருத்துவமனையாக மாற்ற விரும்பினார். இதையடுத்து கடந்த ஆண்டு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு மூவரும் இந்த வீட்டை மீண்டும் கருணாநிதியிடம் ஒப்படைத்தனர்.

தற்போது இன்று பத்திரப்பதிவு மூலம் இந்த வீடு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

முதல்- அமைச்சர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்குப் பிறகு இந்த வீடு மருத்துவமனையாக மாறும். கலைஞர் கருணாநிதி மருத்துவமனை என்று அந்த மருத்துவமனை அழைக்கப்படும்.இந்த மருத்துவமனையை அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை நிர்வகிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு நிகழ்ச்சியில் தயாளு அம்மாள், துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, ஆ.ராசா, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமிர்தம், ஐகோர்ட்டு அட்கேட் ஜெனரல் ராமசாமி. வக்கீல்கள் சுதர்சனம், பழனியாண்டவன், பத்திரப் பதிவு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அரிகரன், ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment