Sunday, May 30, 2010

நன்றி மறவாத முதல்வர் கலைஞர்

http://www.tamilnadu-online.com/wp-content/uploads/2009/09/Kalaignar_Karunanidhi.jpg

நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு இன்று மாலை அண்ணா அறிவாலயம் முரசொலி வளாகத்தல் உள்ள கூட்ட அரங்கில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் கே.பி. ராமலிங்கம், டி.எம்.செல்வகணபதி, சங்கரன் கோவில் தங்கவேல் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

http://parliamentofindia.nic.in/ls/lok13/biodata/13tn16.jpg

இந்த அறிவிப்பின் மூலம் தன்னை நம்பிவருபவர்களை முதல்வர் கலைஞர் கைவிடமாட்டார் என்பது மீண்டும் ஒருமுறை டி.எம். செல்வ கணபதியை தேர்வு செய்ததின் மூலம் நிருபணம்ஆகியுள்ளது. குறிப்பாக மாற்று கட்சியில் இருந்து திமுக-வில் இணையும் தொண்டர்களை ஒருநாளும் கலைஞர் கைவிடமாட்டார் என்பதை முன்னைய காலத்தில் இருந்தே நாம் அறியலாம்.

Thursday, May 27, 2010

கலைஞரின் மலரும் நினைவுகள்

“நானும் எம்.ஜி.ஆரும் நட்புடன் இருக்க  ஆர்.எம்.வீரப்பன் பாடுபட்டார்”  திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மகன் தங்கராஜ்-தாரிணி திருமணம் சென்னை எழும்பூர் ராஜாமுத்தையா மண்டபத்தில் நடந்தது. திருமணத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி நடத்தி வைத்தார். அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

சீரோடும், சிறப்போடும் இன்று இங்கே நடைபெறுகின்ற இந்த மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்கள் தங்கராஜ்-தாரணி ஆகியோர் நெடிது வாழ்ந்து, நிறை வாழ்வையேற்று எல்லாம் வல்ல இறைவன் என்று சொல்ல மாட்டேன் - இயற்கை அருளால் வளம் பல பெற்று - நலமுற எய்தி வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன். அருளாளர் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்ற அருமைச் சகோதரர் ஆர்.எம்.வீ. இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழா - நம்முடைய இல்லத்தில் நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சி என்கின்ற உணர்வோடுதான், நாமெல்லாம் இங்கே கலந்து கொண்டிருக்கிறோம்.

எம்.ஜி.ஆர். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு நீண்டகாலத் தொடர்பு. சுருக்கமாகச் செல்ல வேண்டுமேயானால், மறைந்தும், மறையாத என்னுடைய ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக - அன்பு நண்பர்களிலே ஒருவராக - அவசியப்பட்ட ஆலோசகர்களிலே ஒருவராக விளங்கியவர் நம்முடைய ஆர்.எம்.வீ. ஆவார்கள். அவர்கள் என்னோடு கொண்டிருந்த நட்பை - இன்றுவரையிலே என்னிடத்திலே அவர் கொண்டிருக்கின்ற அன்பைப்போற்றிப் புகழ்ந்து வாழ்த்தியவர்கள் எல்லாம் பாராட்டியிருக்கின்றார்கள்.

1945-ல் குடியரசு அலுவலகத்தில் நான் தந்தைப்பெரியார் அவர்களிடத்திலே குடியரசு பத்திரிகையினுடைய துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று, பணியாற்றச் சென்ற அந்தக் காலந்தொட்டு, எனக்கும், ஆர்.எம்.வீ.க்கும் நெருக்கமான நட்பு - அரும்பி, மலர்ந்து, இன்றைக்கு மணம் வீசுகின்ற வகையில் - மண விழாவினை நான் நடத்தி வைக்கவும், அவர் வரவேற்கவுமான சூழல் உருவாகியிருக்கின்றது.

கலைஞருக்கும், ஆர்.எம்.வீ-க்கும் என்றைக்குமே பிணக்கு ஏற்பட்டதில்லை என்று இங்கே சொன்னார்கள். நம்முடைய திருமாவளவன் அவர்கள் பேசும்போது, கலைஞரும், ஆர்.எம்.வீ. எதிர்ப்பது என்றாலும் அதில் உறுதியாக இருப்பார்கள்; நட்பு பாராட்டுவது என்றாலும், அதிலும் உறுதியாக இருப்பார்கள் என்று சொன்னார். அதிலே ஒரு ரகசியம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அவர் என்னை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட அந்தக் காலத்திலேகூட, என்னிடத்திலே கள்ளக்காதல் கொண்டவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், எம்.ஜி.ஆர். தலைமையிலே இயங்கிய அ.தி.மு.க.விற்கும் இடையில் சில பிரச்சினைகள் தோன்றும்போதெல்லாம், ஆர்.எம்.வீ. எனக்கு ஒரு இரகசியக் கடிதம் வரும். இன்னும் சொல்லப்போனால், எங்களிடையே ஒரு பிரிவு ஏற்படக்கூடிய ஒரு சூழல் - 1971 ஆம் ஆண்டில் ஏற்பட்டபோது, என்னுடைய இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக - அந்தச் சூழ்நிலை உருவாகக்கூடாது ; நீங்கள் இருவரும் பிரிந்து இயங்கக்கூடாது; ஒன்றாக இருந்து தான் இயங்க வேண்டும் - பிரிக்கின்றவர்கள் சில பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் ஒன்றுபட்டு, தமிழகத்திற்காகப் பணியாற்றுங்கள் என்று கண்ணீர் கலந்து தன்னுடைய கவலையைத் தெரிவித்தவர்களிலே மிக முக்கியமானவர் என்னுடைய அன்பிற்குரிய ஆர்.எம்.வீ. என்று சொன்னால், இது வரலாற்றுப் புத்தகத்திலே பதிய வைக்கவேண்டிய ஒரு பேருண்மையாகும்.

பல நேரங்களில் எம்.ஜி.ஆர்., எனக்கும் அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரிசெய்யப் பாடுபட்டவர் நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்கள் என்று சொன்னால், அது மிகையாகாது. ஏன் அவருக்கு அந்தக் கவலை இருந்தது என்றால், நான் குறிப்பிட்டேனே 1945 ஆண்டு - அந்த 1945 ஆம் ஆண்டிலே நாங்கள் இருவரும், இணைந்திருந்து உழைத்த இடம், எங்களுடைய ஆரம்பப் பள்ளிக் கூடம் தொடங்கிய இடம் ஈரோடு. அந்த ஈரோடு - தந்தைப் பெரியாருடைய குருகுலம் - அது உருவாவதற்குக் காரணம், அங்கிருந்து கிளம்பிய உணர்வுகள், நாடெங்கும் பரவியதற்குக் காரணம், திராவிட இயக்கத்தைச் செழிப்படையச் செய்ய வேண்டும்; வலுவடையச் செய்யவேண்டும் - அப்போது தான் திராவிட மக்களுக்கு உண்மையான விடுதலை - உண்மையான சுதந்திரம் கிடைக்கும் - பகுத்தறிவு பெறவேண்டும் மக்கள் - அவர்கள் யாருக்கும் அடிமைகளாக வாழக் கூடாது; சுதந்திரத்தோடு, சுயமரியாதையோடு வாழவேண்டுமென்ற அந்த உணர்வை ஊட்டிய இடம் - எங்களுக்கு ஈரோடு குடியரசு அலுவலகம் என்ற காரணத்தால், அந்தத் தாய்ப்பாலை அருந்திய எங்களுக்கு எவ்வளவுதான் அரசியலிலே மாறுபாடு கள், வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட, அந்த அடிப்படை உணர்விலேயிருந்து பதவிகளுக்காக எங்களை நாங்கள் என்றைக்கும் மாற்றிக் கொண்டதில்லை.

இங்கே தம்பி திருநாவுக்கரசு அவர்கள்கூட, ஆர்.எம்.வீக்கு பதவி கொடுங்கள் என்று சொன்னார். பதவிகளைப்பல பேருக்குக் கொடுக்கின்ற இடத்திலே இருந்தவர் ஆர்.எம்.வீ. அவருக்கு நான் பதவி கொடுப்பது என்பது, ஏதோ தட்டிக் கழிப்பதற்காகச் சொல்லுகின்ற வாசகம் அல்ல; அவர் பதவிகளைப் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியவரே தவிர, கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டியவர் அல்ல.
அந்தளவிற்கு இந்த இயக்கத்தினுடைய ஆணி வேராக, அடிவேராக இந்த இயக்கத்தை வளர்க்கின்ற வலுவான விழுதுகளிலே ஒருவராக அன்றைக்கும் இருந்தார் - இன்றைக்கும் இருப்பவர் நம்முடைய அருமைச் சகோதரர் ஆர்.எம்.வீ. என்பதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அவர் அதை மறக்காமல் இருக்கிறார் என்பதற்கு அடையாளம் தான் இந்த மணவிழாவிற்கு நானே வர வேண்டும், நானே திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாடிநத்த வேண்டும் என்று மிகுந்த உறுதியோடு என்னிடத்திலே சொன்னார். நான் கூடச் சொன்னேன் -நாள் முழுவதும் அளப்பரிய பணிகள், அதற்கிடையே கோவைக்கு மாநாட்டுப் பணிகளைப்பற்றி ஆய்வு செய்யச் செல்கிறோம், அங்கிருந்து உதகமண்டலம் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால் சென்ற எனக்கு இந்த நினைவு வந்தது. நினைவு சாட்டையாக விழுந்தது. ஆர்.எம்.வீ. இல்லத் திருமணத் திற்குச் செல்லாமல் ஓய்வு ஒரு கேடா உனக்கு என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு, இங்கே வந்திருக்கிறேன் என்றால் அது நட்பின் ஆழத்தை, நட்பின் உயர்வை உணர்த்தக் கூடிய ஒன்று என்பதை உங்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்லி, அத்தகைய ஒரு உத்தம நண்பர் என்றைக்கும் இந்த இயக்கத்தினுடைய தூணாக விளங்கிக் கொண்டி ருப்பவர், திராவிட இயக்கத்தினுடைய தோன்றல் - திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு விழுதாக இருந்து, பாதுகாத்துக் கொண்டிருப்பவர் - அப்படிப்பட்ட அருமைச் சகோதரர் இல்லத்தில் நடைபெற்றுள்ள இந்த மண விழாவில் உங்கள் அனைவருடைய வாழ்த் துக்களையும் எருவாக்கி - இந்த மண மக்கள் தழைத்து வாழ்த்துவார்கள், செழித்து வாழ்வார்கள் என்ற வாழ்த்தினை உங்களோடு இணைந்து நானும் வழங்கி விடைபெற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி பேசினார்.

Tuesday, May 25, 2010

ஆட்டம் காணும் அ.தி.மு.க. கூடாரம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்    முத்துசாமி தி.மு.க.வில் சேருகிறார்

அ.தி.மு.க. வை பொறுத்தவரை உண்மையான விசுவாசிகளுக்கும், எம்.ஜி.ஆர்.ன் உண்மையான தொண்டர்களுக்கும் மரியாதை என்பது கானல் நீர்தான். மானமுள்ள எந்த அரசியல்வாதியும் அ.தி.மு.க. வில் இருக்க விரும்பமாட்டான் பொதுவாக பெரிய பொறுப்பில் இருக்கும் பெரிய பருப்புகள் மட்டுமே அ.தி.மு.க. வில் வாழமுடியும், மற்றவர்களின் காலை வாருவதிலே குறியாக இருப்பார்கள். முத்துசாமி போன்ற நல்ல அரசியல்வாதிகளால் அ.தி.மு.க. வில் அவமானகளை தாங்கிக்கொண்டு இருக்கமுடியாது என்பது என்போன்றவர்களுக்கு புரியும்.


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் முத்துசாமி தி.மு.க.வில் இணை கிறார் என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியானதாகும். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர் முத்துசாமி. பின்னர் 1991-96-ல் ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி, அந்த பகுதியில் செல்வாக்கு உள்ள பிரமுகர். அ.தி.மு.க. தொண்டர்களிடமும் இவருக்கு நல்ல மரியாதை உள்ளது. தற்போது அ.தி.மு.க. மாநில அமைப்புச்செயலாளராக இருந்து வருகிறார். ஈரோடு, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.

சமீப காலமாக முத்துசாமிக்கு அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக முத்துசாமியும், அவரது ஆதரவாளர்களும் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தனர்.

இந்த நிலையில் முத்துசாமி அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளார். அவரது ஆதரவாளர்களும் தி.மு.க. வில் சேருகிறார்கள்.

தி.மு.க.வில் சேருவது குறித்து முத்துசாமி இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் தி.மு.க.வில் சேரும் முடிவை அறிவிக்கிறார்.

முன்னாள் எம்.பி. வி.கே. சின்னசாமி, ஈரோடு முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், ஈரோட்டைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் தொண்டர்களுடன் தி.மு.க. வில் இணைகிறார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் முறைப்படி இணைய முத்துசாமி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


ஜெயலலிதாவெல்லாம் திருந்த போவதில்லை.கட்சிக்கு சமாதி கட்டிவிட்டு கொடைநாட்டில் தூங்க போய்விடுவார்.


ஒருவேளை இது நடந்தாலும் நடக்கும் ..........


எல்லோரும் அ.தி.மு.க.வை விட்டு போனாலும் கவலை இல்லை..உனக்கு என்று மன்னர்குடி சொந்தங்கள் உண்டு..அவர்கள் மட்டுமே நமக்கு போதும்..சசிகலாவை அ.தி.மு.க. தலைவர் ஆக்கு...சசிகலா அக்கா பசங்கள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைவர் ஆக்கு..சசிகலா அண்ணன் பசங்களை..செயற்குழு உறுப்பினர் ஆக்கு..சசிகலா ஒண்ணுவிட்ட அண்ணன் பசங்கள கட்சியில் ஒவ்வொரு பதவி கொடுங்கள்..சசிகலாவின் ரெண்டுவிட்ட அக்கா பசங்கள கொள்கை பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள்..உங்கள் முன்னாள் வளர்ப்பு மகனையும் கூட வரசொல்லி விடுங்கள்..எல்லாம் சரியாகி விடும்..உண்மையான தொண்டர்களுக்கு இனி என்ன வேலை இருக்கு..அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு...எல்லாமே மன்னார்குடி கும்பலுக்கு மட்டும்தான்..அவர்களை வைத்து நீங்கள் கட்சியை வளர்க்க வாழ்த்துக்கள்.....

ஆனால் இதுதான் உண்மை என்பது எல்லா அ.தி.மு.க காரனுக்கும் தெரியும் ........




Wednesday, May 5, 2010

பகைமை பாராட்டாத தலைவர் கலைஞர்

திராவிட சமுதாயத்தை காக்கும்    ஒரே இயக்கம் தி.மு.க.தான்;    திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
முன்பெல்லாம்-ஏன் இப்போதும் கூட- சித்தூரார் என்றால், அது சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை யைத் தான் குறிக்கும். முசிறியார் என்றால் முசிறி சுப்பிரமணிய அய்யரைக் குறிக்கும். திருவாடுதுறையார் என்றால் திருவாடுதுறை ராஜரத்தினத்தைக் குறிக்கும். திருவெண்காட்டார் என்றால் திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளையைக் குறிக்கும். அதைப் போலவே திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேடப்பட்டியார்’’ என்றால், அது தம்பி முத்தையாவைக் குறிக்கும். (பலத்த கைதட்டல்) யாரும் முழுப் பெயரையும் ஊரோடு இணைந்த பெயரை உச்சரிப்பதில்லை, சேடப்பட்டி என்று தான் சொல்வார்கள்.

என்னிடத்திலே அவர் வேறு இடத்திலே இருந்து- நம்மை வசை பாடுகிறார் என்ற செய்தியை என்னிடத்திலே சொல்லுகின்ற தோழர்கள் கூட யார் அப்படி பேசியது என்று நான் கேட்டால், சேடபட்டி’’ தான் அப்படிப்பேசினார் என்று அவ்வளவு மரியாதையாகத் தான் சொல்வார்களே தவிர, முத்தையா என்று முழுப் பெயரையும் யாரும் சொன்ன தில்லை. அதனால் தான் எனக்குக் கூட திடீரென்று சேடபட்டி முத்தையா என்று சொன்னால், இவர் வேறு யாரோ ஒருவர் என்று கருதுகின்ற அளவிற்கு நிலைமை இருந்தது. ஆனால் தம்பி ஸ்டாலின் என்னிடத்திலே சேடபட்டி முத்தையா கூட தி.மு. கழகத்திலே சேருவதற்குத் தயாராக இருக்கிறார், சேருகிற நாளைச் சொல்லுங்கள், வசதியான நாளைச் சொல்லுங்கள் என்று கேட்ட போது, இது எப்படி நடந்தது என்று கேட்டேன். அவர் சொன்னார், அவர் மனதைத் திருத்தியது, அவருடைய மகன் மணிமாறன் என்று என்னிடத்திலே (கைதட்டல்) தம்பி ஸ்டாலின் சொன்னார். ஸ்டாலின் இளைஞர் அணி தொடங்கியதில் ஒரு லாபம் இருக்கிறது என்பதை நான் அப்போது தான் புரிந்து கொண்டேன்.

என்னுடைய கருத்தைக் கேட்காமலே கூட சேடபட்டியை திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ள ஸ்டாலினும், மணி மாறனும் கூட்டாகச் சதி செய்து- எனக்குத் தெரியாமலே அவரை இங்கே கொண்டு வந்து இணைத்து விட்டார்கள். நாங்கள் பாதை தவறியவர்கள், திரும்பி வந்திருக்கிறோம், எங்களிடம் அன்பு காட்டுங்கள்’’ என்று மிகுந்த பணிவன்போடு, மிகுந்த உணர்ச்சியோடு இங்கே தம்பி சேடப்பட்டி பேசியதை நீங்கள் எல்லாம் கேட்டீர்கள்.

நான் சென்று திரும்பியவர்களிடம் எப்போதுமே பகை பாராட்டியதில்லை, இன்னும் சொல்லப் போனால் காணாமல் போன பிள்ளைகளைக் கண்டுபிடித்து விட்டால் (கைதட்டல்) அந்தப் பிள்ளையும் ஓடி வந்து அம்மா’’ என்று மடியில் விழும். தாயும் ஓடி வந்து கண்ணே, மணியே’’ என்று முத்தங்கள் கொடுத்து சீராட்டி பாராட்டுவாள். அப்படித் தான் காணாமல் போன பிள்ளையாக இருந்து மீண்டும் கழகத்திலே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, கழகத்தின் பணிகளைச் செய்வதற்காக தன்னைத்தயார்படுத்திக் கொண்டு அதற்கேற்ற வகையிலே அந்த வட்டாரத்திலே உள்ள கழகத் தோழர்களின் பேரன்பைப்பெற்று இன்றையதினம் நம்முடைய இயக்கத்தின் சமுதாயப் புரட்சியாக, தொடர்ந்து நடைபெற்று வருகின்ற இத்தகைய திருமண முறையைக்கடைப்பிடித்து இன்று அவருடைய மகனுக்கு சுயமரியாதைத் திருமணத்தை இந்த மேடையிலே நடத்தி வைத்திருக்கிறார்.

சுயமரியாதை என்பது ஒரு இயக்கம்-நான் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியிலே பெரியார் பெயரால் அமைந்துள்ள மய்யத்தைத் திறந்து வைத்தேன். பெரியார் மய்யம் திறக்கப்பட்ட போது நான் சொன்னேன்- மய்யம் கொள்வதென்பது புயலுக்குத் தான் சொல்வார்கள்-பெரியார் மய்யம் கொண்டிருக்கிறார், டெல்லியிலும் மய்யம் கொண்டு விட்டார் என்று குறிப்பிட்டுச் சொன்னேன்.

மய்யம் கொண்ட புயல், அதோடு நின்று விடாது. பக்கத்திலே உள்ள பிரதேசங்களிலும் வீசும். பக்கத்திலே உள்ள பகுதிகளிலும் அதனுடைய தாக்கம் இருக்கும். அதைப் போல டெல்லியிலே மய்யம் கொண்ட பெரியார் மய்யத்தின் வேகம் பக்கத்து மாநிலங்களில், ஏன் அகில இந்தியாவிலே நிச்சயமாக வீசும், அந்தத் தாக்கம் இருக்கும், அந்தப் பாதிப்பு இருக்கும்.

பாதிப்பு என்பது பலன் தருகின்ற பாதிப்பாக- பகுத்தறிவுக்கு மேலும் மேலும் வலுவூட்டுகின்ற பாதிப்பாகத் தான் இருக்கும் என்ற கருத்தில் நான் இதைச் சொன்னேன். அதைப் போல தமிழகத்தில், தந்தை பெரியாரின் கொள்கைகள், சுயமரியாதை இயக்கத்தின் பெயரால், தன் மான இயக்கத்தின் பெயரால், இனத்தின் பெயரால், இன உணர்வின் பெயரால் எந்த அளவிற்கு இன்றைக்கு ஆரியம் ஆதிக்கம் பெற்றிருக்கின்றன என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள். அதைத் தான் இங்கே தம்பி சேடபட்டி பேசும்போது சொன்னார். தான் போன இடத்திலிருந்து-பாதை தவறி விட்டோம் என்று உணர்ந்த போது பாழும் கிணற்றிலே விழ நேரிட்டது என்று குறிப்பிட்டார்.

பாழும் கிணறோ, நல்ல கிணறோ அதைப்பற்றிக் கவலை இல்லை. இன்றைக்கு கிணற்றிலேயிருந்து தம்பி சேடபட்டி! உன்னை மீட்டு விட்டோம், நீ எங்களுடைய கரங்களிலே பத்திரமாக இருக்கிறாய் என்பதை எடுத்துச் சொல்லி-இந்தப் பகுத்தறிவு பாசறையில், சமதர்மப் பூங்காவில் தந்தை பெரியார் அன்றைக்கு விதைத்த விதை-பேரறிஞர் அண்ணா பரப்பிய மணம் - இவைகள் எல்லாம் கெடாமல் தொடர்ந்து காப்பாற்றுகின்ற சமுதாயப் பணியிலே ஈடுபட்டிருக்கின்ற இந்த இயக்கத்தில்-நீயும் எல்லா தம்பிமார்களைப் போல- ஒரு தம்பியாக இருந்து திராவிட இயக்கத்தைக் கட்டிக்காப்பாற்ற வேண்டு மென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அப்படிக் காப்பாற்றுகின்ற அந்தப் பொறுப்பும்-அந்த நிலையும்-நிச்சயமாக நம்முடைய சேடபட்டி முத்தையா அவர்களுக்கு உண்டு (கைதட்டல்) என்பதை நிரூபிக்கின்ற வகையிலே தான் அவரே சொன்னார்- திருமங்கலத்திலே நடைபெற்ற தேர்தலிலே எல்லா ஒன்றியங்களையும் விட தன்னுடைய மகன் மணிமாறன் ஒன்றியச் செயலாளராக இருந்து பணியாற்றிய அந்தப் பகுதியிலே தான் அதிக வாக்குகள் நமக்குக் கிடைத்தன என்று சொன்னார்.

இப்போது தான் எனக்குப் புரிகிறது-மணி,’’ மணி,’’ அதனால் இவர்கள் ஜெயித்தார்கள் என்று சில எதிர்க்கட்சிக்காரர்கள் சொன்னார்களே, இந்த மணி’’யினால் தான் நாம் ஜெயித்திருக்கிறோம் (பலத்த கைதட்டல்) என்பது எனக்குப் புரிகிறது. அப்படிப்பட்ட திறமையான ஒரு குடும்பம்- பகுத்தறிவு இயக்கத்திலே அறிவு வளமையான ஒரு குடும்பம். இடையிலே ஏற்பட்ட சில மனக்கசப்புகள்-உள்ளூரால் ஏற்பட்ட சில கொந்தளிப்புகள்- அல்லது நண்பர்களிடம் ஏற்பட்ட சில கசப்புகள்- அதன் காரணமாக பலர் நம்மிடமிருந்து பிரிய நேரிட்டிருக்கிறது. அப்படிப் பிரிந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு திராவிடர் சமுதாயத்தைக் கட்டிக் காக்கக் கூடிய ஒரேயொரு இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம் தான் என்பதை உணர்ந்து-இங்கே வந்து கொண் டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வருக வருக என்று நான் வரவேற்றிருக்கிறேன். அதைப்போல அந்தக் குடும்பத்தில் இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த இனிய மணவிழாவில் மணமக்களாம் மணிமாறன் அவர்களையும் அன்புச் செல்வி பாரதியையும் வாழ் வாங்கு வாழ வாழ்த்தினார்.


இன்று சென்னையில் தி.மு.க. தேர்தல் பணி செயலாளர் சேடப்பட்டி முத்தையா மகன் திருமணத்தை இன்று முதல்- அமைச்சர் கருணாநிதி நடத்தி வைத்து முதல்வர் பேசினார்.