Wednesday, May 5, 2010

பகைமை பாராட்டாத தலைவர் கலைஞர்

திராவிட சமுதாயத்தை காக்கும்    ஒரே இயக்கம் தி.மு.க.தான்;    திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
முன்பெல்லாம்-ஏன் இப்போதும் கூட- சித்தூரார் என்றால், அது சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை யைத் தான் குறிக்கும். முசிறியார் என்றால் முசிறி சுப்பிரமணிய அய்யரைக் குறிக்கும். திருவாடுதுறையார் என்றால் திருவாடுதுறை ராஜரத்தினத்தைக் குறிக்கும். திருவெண்காட்டார் என்றால் திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளையைக் குறிக்கும். அதைப் போலவே திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேடப்பட்டியார்’’ என்றால், அது தம்பி முத்தையாவைக் குறிக்கும். (பலத்த கைதட்டல்) யாரும் முழுப் பெயரையும் ஊரோடு இணைந்த பெயரை உச்சரிப்பதில்லை, சேடப்பட்டி என்று தான் சொல்வார்கள்.

என்னிடத்திலே அவர் வேறு இடத்திலே இருந்து- நம்மை வசை பாடுகிறார் என்ற செய்தியை என்னிடத்திலே சொல்லுகின்ற தோழர்கள் கூட யார் அப்படி பேசியது என்று நான் கேட்டால், சேடபட்டி’’ தான் அப்படிப்பேசினார் என்று அவ்வளவு மரியாதையாகத் தான் சொல்வார்களே தவிர, முத்தையா என்று முழுப் பெயரையும் யாரும் சொன்ன தில்லை. அதனால் தான் எனக்குக் கூட திடீரென்று சேடபட்டி முத்தையா என்று சொன்னால், இவர் வேறு யாரோ ஒருவர் என்று கருதுகின்ற அளவிற்கு நிலைமை இருந்தது. ஆனால் தம்பி ஸ்டாலின் என்னிடத்திலே சேடபட்டி முத்தையா கூட தி.மு. கழகத்திலே சேருவதற்குத் தயாராக இருக்கிறார், சேருகிற நாளைச் சொல்லுங்கள், வசதியான நாளைச் சொல்லுங்கள் என்று கேட்ட போது, இது எப்படி நடந்தது என்று கேட்டேன். அவர் சொன்னார், அவர் மனதைத் திருத்தியது, அவருடைய மகன் மணிமாறன் என்று என்னிடத்திலே (கைதட்டல்) தம்பி ஸ்டாலின் சொன்னார். ஸ்டாலின் இளைஞர் அணி தொடங்கியதில் ஒரு லாபம் இருக்கிறது என்பதை நான் அப்போது தான் புரிந்து கொண்டேன்.

என்னுடைய கருத்தைக் கேட்காமலே கூட சேடபட்டியை திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ள ஸ்டாலினும், மணி மாறனும் கூட்டாகச் சதி செய்து- எனக்குத் தெரியாமலே அவரை இங்கே கொண்டு வந்து இணைத்து விட்டார்கள். நாங்கள் பாதை தவறியவர்கள், திரும்பி வந்திருக்கிறோம், எங்களிடம் அன்பு காட்டுங்கள்’’ என்று மிகுந்த பணிவன்போடு, மிகுந்த உணர்ச்சியோடு இங்கே தம்பி சேடப்பட்டி பேசியதை நீங்கள் எல்லாம் கேட்டீர்கள்.

நான் சென்று திரும்பியவர்களிடம் எப்போதுமே பகை பாராட்டியதில்லை, இன்னும் சொல்லப் போனால் காணாமல் போன பிள்ளைகளைக் கண்டுபிடித்து விட்டால் (கைதட்டல்) அந்தப் பிள்ளையும் ஓடி வந்து அம்மா’’ என்று மடியில் விழும். தாயும் ஓடி வந்து கண்ணே, மணியே’’ என்று முத்தங்கள் கொடுத்து சீராட்டி பாராட்டுவாள். அப்படித் தான் காணாமல் போன பிள்ளையாக இருந்து மீண்டும் கழகத்திலே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, கழகத்தின் பணிகளைச் செய்வதற்காக தன்னைத்தயார்படுத்திக் கொண்டு அதற்கேற்ற வகையிலே அந்த வட்டாரத்திலே உள்ள கழகத் தோழர்களின் பேரன்பைப்பெற்று இன்றையதினம் நம்முடைய இயக்கத்தின் சமுதாயப் புரட்சியாக, தொடர்ந்து நடைபெற்று வருகின்ற இத்தகைய திருமண முறையைக்கடைப்பிடித்து இன்று அவருடைய மகனுக்கு சுயமரியாதைத் திருமணத்தை இந்த மேடையிலே நடத்தி வைத்திருக்கிறார்.

சுயமரியாதை என்பது ஒரு இயக்கம்-நான் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியிலே பெரியார் பெயரால் அமைந்துள்ள மய்யத்தைத் திறந்து வைத்தேன். பெரியார் மய்யம் திறக்கப்பட்ட போது நான் சொன்னேன்- மய்யம் கொள்வதென்பது புயலுக்குத் தான் சொல்வார்கள்-பெரியார் மய்யம் கொண்டிருக்கிறார், டெல்லியிலும் மய்யம் கொண்டு விட்டார் என்று குறிப்பிட்டுச் சொன்னேன்.

மய்யம் கொண்ட புயல், அதோடு நின்று விடாது. பக்கத்திலே உள்ள பிரதேசங்களிலும் வீசும். பக்கத்திலே உள்ள பகுதிகளிலும் அதனுடைய தாக்கம் இருக்கும். அதைப் போல டெல்லியிலே மய்யம் கொண்ட பெரியார் மய்யத்தின் வேகம் பக்கத்து மாநிலங்களில், ஏன் அகில இந்தியாவிலே நிச்சயமாக வீசும், அந்தத் தாக்கம் இருக்கும், அந்தப் பாதிப்பு இருக்கும்.

பாதிப்பு என்பது பலன் தருகின்ற பாதிப்பாக- பகுத்தறிவுக்கு மேலும் மேலும் வலுவூட்டுகின்ற பாதிப்பாகத் தான் இருக்கும் என்ற கருத்தில் நான் இதைச் சொன்னேன். அதைப் போல தமிழகத்தில், தந்தை பெரியாரின் கொள்கைகள், சுயமரியாதை இயக்கத்தின் பெயரால், தன் மான இயக்கத்தின் பெயரால், இனத்தின் பெயரால், இன உணர்வின் பெயரால் எந்த அளவிற்கு இன்றைக்கு ஆரியம் ஆதிக்கம் பெற்றிருக்கின்றன என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள். அதைத் தான் இங்கே தம்பி சேடபட்டி பேசும்போது சொன்னார். தான் போன இடத்திலிருந்து-பாதை தவறி விட்டோம் என்று உணர்ந்த போது பாழும் கிணற்றிலே விழ நேரிட்டது என்று குறிப்பிட்டார்.

பாழும் கிணறோ, நல்ல கிணறோ அதைப்பற்றிக் கவலை இல்லை. இன்றைக்கு கிணற்றிலேயிருந்து தம்பி சேடபட்டி! உன்னை மீட்டு விட்டோம், நீ எங்களுடைய கரங்களிலே பத்திரமாக இருக்கிறாய் என்பதை எடுத்துச் சொல்லி-இந்தப் பகுத்தறிவு பாசறையில், சமதர்மப் பூங்காவில் தந்தை பெரியார் அன்றைக்கு விதைத்த விதை-பேரறிஞர் அண்ணா பரப்பிய மணம் - இவைகள் எல்லாம் கெடாமல் தொடர்ந்து காப்பாற்றுகின்ற சமுதாயப் பணியிலே ஈடுபட்டிருக்கின்ற இந்த இயக்கத்தில்-நீயும் எல்லா தம்பிமார்களைப் போல- ஒரு தம்பியாக இருந்து திராவிட இயக்கத்தைக் கட்டிக்காப்பாற்ற வேண்டு மென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அப்படிக் காப்பாற்றுகின்ற அந்தப் பொறுப்பும்-அந்த நிலையும்-நிச்சயமாக நம்முடைய சேடபட்டி முத்தையா அவர்களுக்கு உண்டு (கைதட்டல்) என்பதை நிரூபிக்கின்ற வகையிலே தான் அவரே சொன்னார்- திருமங்கலத்திலே நடைபெற்ற தேர்தலிலே எல்லா ஒன்றியங்களையும் விட தன்னுடைய மகன் மணிமாறன் ஒன்றியச் செயலாளராக இருந்து பணியாற்றிய அந்தப் பகுதியிலே தான் அதிக வாக்குகள் நமக்குக் கிடைத்தன என்று சொன்னார்.

இப்போது தான் எனக்குப் புரிகிறது-மணி,’’ மணி,’’ அதனால் இவர்கள் ஜெயித்தார்கள் என்று சில எதிர்க்கட்சிக்காரர்கள் சொன்னார்களே, இந்த மணி’’யினால் தான் நாம் ஜெயித்திருக்கிறோம் (பலத்த கைதட்டல்) என்பது எனக்குப் புரிகிறது. அப்படிப்பட்ட திறமையான ஒரு குடும்பம்- பகுத்தறிவு இயக்கத்திலே அறிவு வளமையான ஒரு குடும்பம். இடையிலே ஏற்பட்ட சில மனக்கசப்புகள்-உள்ளூரால் ஏற்பட்ட சில கொந்தளிப்புகள்- அல்லது நண்பர்களிடம் ஏற்பட்ட சில கசப்புகள்- அதன் காரணமாக பலர் நம்மிடமிருந்து பிரிய நேரிட்டிருக்கிறது. அப்படிப் பிரிந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு திராவிடர் சமுதாயத்தைக் கட்டிக் காக்கக் கூடிய ஒரேயொரு இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம் தான் என்பதை உணர்ந்து-இங்கே வந்து கொண் டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வருக வருக என்று நான் வரவேற்றிருக்கிறேன். அதைப்போல அந்தக் குடும்பத்தில் இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த இனிய மணவிழாவில் மணமக்களாம் மணிமாறன் அவர்களையும் அன்புச் செல்வி பாரதியையும் வாழ் வாங்கு வாழ வாழ்த்தினார்.


இன்று சென்னையில் தி.மு.க. தேர்தல் பணி செயலாளர் சேடப்பட்டி முத்தையா மகன் திருமணத்தை இன்று முதல்- அமைச்சர் கருணாநிதி நடத்தி வைத்து முதல்வர் பேசினார்.

No comments:

Post a Comment