Friday, January 29, 2010

மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேலு, மத்திய மந்திரி மு.க.அழகிரி குறித்து `அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு பட்டாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

"நாளைய தினம் (இன்று ஜன.30) பிறந்த தினம் கொண்டாடும் தி.மு.கழகத்தின் தென் மண்டல அமைப்பாளரும், மத்திய மந்திரியும், என்னுடைய அன்பு அண்ணனுமான மு.க.அழகிரி பற்றி ரத்தினவேல் எழுதிய அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் உங்களோடு கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். உங்களோடு வாழ்த்திப் பேசி பிறந்த நாள் வாழ்த்தை முன்கூட்டியே கூறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த ஆண்டு அண்ணன் மு.க.அழகிரியின் பிறந்த தின விழா ஒரு பொதுக்கூட்டமாக அல்லாமல் மாநாடு போன்று நடைபெற்றது. அந்த விழாவில் நான் ஒன்றை குறிப்பிட்டுக் கூறினேன். "நானும் அண்ணன் மு.க.அழகிரியும் தி.மு.கழகத்திற்கும், கலைஞருக்கும் இரட்டைக்குழல் துப்பாக்கியை போல் இருப்போம்'' என்ற கருத்தை சொன்னேன். அதே கருத்தை உறுதியாக இப்போதும் சொல்கிறேன். அண்ணன் அழகிரி இன்னும் பல சிறப்புகளைப் பெற்று தி.மு.கழகத்திற்கும், சமுதாயத்திற்கும் குறிப்பாக கலைஞருக்கும் வலு சேர்க்கின்ற வகையில் பணியாற்ற வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இந்த விழாவில் பங்கேற்று உடனடியாக விமானத்தில் சென்னை செல்ல இருக்கிறேன். மு.க.அழகிரி அவர்களை வாழ்த்த வயதில்லை என்றாலும், அவரைவிட வயதில் குறைந்த அவருடைய தம்பியாக இருந்தாலும், தி.மு.கழகத்தின் சார்பாகவும், இளைஞர் அணி சார்பாகவும் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்தி இங்கிருந்து விடை பெற்றுச் செல்கிறேன்.''

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசி முடித்தவுடன், அவரும் மத்திய மந்திரி மு.க.அழகிரியும் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அவர்களுடைய தாயார் தயாளுஅம்மாளிடம் சென்று பேசினார்கள். பின்னர் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

தொடர்ந்து விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கவிஞர் கனிமொழி எம்.பி., குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் ஆகியோர் பேசினார்கள். முடிவில் பி.மூர்த்தி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

விழாவில் மு.க.அழகிரியின் தாயார் தயாளு அம்மாள், மனைவி காந்தி அழகிரி, மகன் துரை, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மைதீன்கான், தமிழரசி, டாக்டர் பூங்கோதை, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், மத்திய மந்திரி நெப்போலியன் ஆகியோரும் வந்திருந்து மு.க.அழகிரிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

முன்னதாக திருச்சியை அடுத்த குண்டூரில் உள்ள எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா தொடக்க விழாவில் தமிழக துணை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு கல்விக்காக பல சலுகைகளை வழங்கி வருகிறது. 2007-08-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள்.

சிறுபான்மையினர் வளர்ச்சியில் இந்த அரசு எப்போதுமே மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. சிறுபான்மையினருக்கு என்று தனியாக வழங்கப்பட்ட 31/2 சதவீத உள் ஒதுக்கீட்டினால் 2008-2009-ம் கல்வியாண்டில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த 52 மாணவர்கள் மருத்துவ கல்லூரியிலும், 4,885 பேர் பொறியியல் கல்லூரிகளிலும் இடம் கிடைத்து படித்து வருகிறார்கள். உள் இடஒதுக்கீட்டின் மூலம் 747 இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு பணிகளில் வேலை வழங்கப்பட்டு உள்ளது. சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்களுக்காக கோவை, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 5 இடங்களில் விடுதிகளும் கட்டப்பட்டு உள்ளன. இப்படி சிறுபான்மையினர்களுக்காக இந்த அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வருங்காலத்தை நிர்ணயிக்க கூடியவர்களாக மாணவர்கள் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு துணை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.



வெற்றியின் ரகசியம் - மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

தேர்தலில் தொடர் வெற்றியின் காரணங்கள் குறித்து மதுரையில் நடந்த, "அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விளக்கினார்.

அவர் பேசியதாவது: ஏழைகளுக்கு உதவத்தான் நான் மத்திய அமைச்சரானேன். வெறும் அழகிரியாக இருந்தால், நான் சொல்வதை அதிகாரிகள் கேட்க மாட்டார்கள். மத்திய அமைச்சர் எனில் உடனே கேட்பர். குடிநீர், சாலை வசதிகளை உடனே நிறைவேற்றுவர். முதல்வர் கருணாநிதி 1962ல், தஞ்சாவூரில் ஒரு பண முதலைக்கு எதிராக போட்டியிட்டார். நான் அப்போது தேர்தல் பணியாற்றினேன். கருணாநிதி இரவு, பகல் பாராமல் ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று பார்வையிடுவார். கட்சி நிர்வாகிகள் அங்கு யாரும் இல்லையெனில் கண்டிப்பார். தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்படுவார். நான் அவரிடம் கற்றுக் கொண்டதால், தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறுகிறேன்.

சைதாப்பேட்டை (1967) தேர்தல் பணியின் போது, கருணாநிதியை கொலை செய்ய முயன்றனர். அவர் தப்பித்து குடிசைப் பகுதிக்குள் நுழைந்தார். அங்கிருந்த பெண்கள் அவருக்கு உதவி செய்தனர். துணிச்சலை நான் அவரிடம் கற்றேன்.திருமங்கலம் இடைத்தேர்தலில், நான் சொன்னது போல் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வென்றதால் எனக்கு இப்பதவி கிடைத்தது. நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது நீங்கள் தான். இந்த மத்திய அமைச்சர் பதவியே உங்களுக்கு உழைக்கத்தான்.

திருமங்கலம், கம்பம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பணியாற்றும் போது கருணாநிதி, தொகுதி நிலவரம் பற்றி என்னிடம் அடிக்கடி கேட்பார். ஆனால், திருச்செந்தூர் தொகுதி தேர்தலின் போது அவர் எதுவும் கேட்கவில்லை. எனக்கு அவர் மீது வருத்தம் உண்டு. பின், நான் சென்னை சென்றபோது, என் தாயிடம் இது பற்றி கூறினேன். அவர் கருணாநிதியிடம், "அழகிரி உங்கள் மீது கோபமாக இருக்கிறான்' என்றார்.

கருணாநிதி என்னிடம், "என்னடா கோபம்' என்றார். நான், " தொகுதி நிலவரம் குறித்து என்னிடம், ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே' என்றேன். அவர், " நீ வெற்றி பெற்று விடுவாய் என்பது தெரியும்' என சாதுர்யமாகக் கூறினார். இந்த சாதுர்யத்தை அவரிடம் கற்றேன்.என்னைப் பற்றி இப்புத்தகம் எழுதியதால், எதிர்காலத்தில் பிரச்னை வரலாம் என ரத்தினவேல் நினைத்திருக்கலாம். ஆனால், நான் சொல்கிறேன்; 2011க்கு பின் அ.தி.மு.க.,வே இருக்காது; இதை நான் உறுதியாகச் சொல்கிறேன் என்றார்.


Wednesday, January 27, 2010

முதல்வர் கலைஞரின் சாரதியான டி ஆர் பாலு


முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் தம்பி சக்திவேல் மகன் முத்துக்குமரன்-வித்யா திருமணம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்தது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மணமக்களை வாழ்த்தி பேசிய கவிஞர் வைரமுத்து திருமணம் நடத்தி வைத்த தலைவரை மறந்து விடக்கூடாது. அடுத்த ஆண்டு அல்லது 5 ஆண்டுக்கு ஒருமுறையாவது திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது பற்றி தலைவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று கூறினார். அவருக்கு கவலை இல்லை. ஆனால் எல்லோரும் கடிதம் எழுதினால் எனக்கு அது எவ்வளவு பெரிய பாரம் என்பது அவருக்கு தெரியாது.

1971-ல் நான் திருமணம் நடத்தி வைத்தவர் இப்போது எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்றும் இன்னொருவர் பேரனுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதுகிறார்கள்.

இது போன்ற கடிதங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே மணமக்கள் திருமணத்திற்கு பிறகு அவரவர் வேலை பார்த்துக் கொண்டு அவர்கள் பரம்பரையை கவனித்து கொண்டு இருப்பதுதான் நல்லது. இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் கோபு பேசும் போது, அரசியலில் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து திருமண விழாக்களில் பண்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த பண்பாட்டை உறவினர் திருமணத்தில் மட்டும் அல்ல. கருணாநிதி வீட்டு திருமணத்திலும் கடைபிடிக்க வேண்டும். பண்பாடு என்பது பொதுவானது. அது ஒரு வழிப்பாதை அல்ல. அதை அனைவரும் ஏற்றுக்கொண்டு அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க வேண்டும். இதை அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தோழர்களுக்கும் இந்த அறிவுரையை வழங்குவார் என்று நம்புகிறேன்.

டி.ஆர்.பாலு கோபக்காரர் என்று கூறினார்கள். ஆனால் அவரது கோபம் உடனே தணிந்து விடும். ஒருமுறை அவர் தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டார். நான் வேறு ஒரு தொகுதியில் நிற்கும்படி கூறினேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு அதே தொகுதியில் அவர் நிற்கலாம் என்று கூறி அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கும் கோபப்பட்டார். ஏன் இவ்வளவு தாமதமாக தந்தீர்கள் என்று கோபப்பட்டார்.

அவர் குணத்தை அறிந்துதான் அவருக்கு பாலு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பால் கொதிக்கும் தண்ணீர் விட்டால் தணிந்து விடும். அடிக்கடி அவர் கோபப்பட்டாலும், அவருக்கு எப்படி தண்ணீர் தெளித்து அடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

நான் சொன்னது அனைத்தையும் கேட்கும் அருமை தம்பி பாலு எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட காலத்தில் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் கழக தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆட்சியும் கலைக்கப்பட்டது.

இதனால் எனக்கு கார் ஓட்டிய சில டிரைவர்கள் வேலையை விட்டு போய் விட்டார்கள். ஒருமுறை அன்பகத்தில் இருந்து காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது அண்ணா அறிவாலயம் கட்டப்படவில்லை. அந்த இடத்திற்கு கார் வந்தபோது டிரைவர் திடீரென்று இறங்கினார். நான் வேலை விட்டு போகிறேன் என்று கூறினார். வீடு வரை வாருங்கள் என்று சொன்ன போதும் அவர் அதை கேட்கவில்லை. பாதியில் என்னை விட்டுவிட்டு போய் விட்டார்.

நான் ஆட்டோ பிடித்து இரவு 12 மணிக்கு வீடு போய் சேர்ந்தேன். அதன் பிறகு வெளியூர் சென்றால் எனது காரை கண்ணப்பனும், உள்ளூரில் டி.ஆர்.பாலுவும் ஓட்டினார்கள். அப்போது பாலு மிரட்டப்பட்டார். கைது செய்யப்பட்டார். என்றாலும் எதற்கும் துணிந்த, எனக்காக எதையும் செய்யும் தம்பியாக அவர் இருக்கிறார்.

இந்த இயக்கம் இத்தனை ஆண்டுகள் எத்தனையோ சோதனைகளை தாண்டி தாக்கு பிடித்திருக்கிறது என்றால், இந்த இயக்கம் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் எதற்கும் துணிந்த டி.ஆர்.பாலு போன்ற தொண்டர்கள் இதில் இருப்பதால்தான். திராவிட இயக்கம் ஜனநாயகத்தை காக்கவும், இந்தியாவை வாழவைக்கவும் தோழமை கட்சிகளுடன் உழைத்து வருகிறது.

இந்த நாட்டில் மத நல்லிணக்கத்தை வேரூன்ற செய்யவும், மதவாதத்தை கிள்ளி எறியவும், ஏழை- எளியவர்கள் வளம் பெறவும் நாம் பெரிய சக்திகளை எதிர்த்து போராட முடிகிறது என்றால், அதற்கு காரணம் பாலு போன்ற தொண்டர்கள் இருப்பதால்தான். அவரது இல்ல திருமணத்தில் இல்லை எனது இல்ல திருமணத்தில் மணமக்கள் எல்லா நலமும் பெற வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tuesday, January 26, 2010

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது


சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் தங்கபாலு தேசிய கொடி ஏற்றினார். பின்னர் சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

அப்போது, டெல்லியில் சோனியாவை ஜெயலலிதா சந்தித்ததில் முக்கியத்துவம் உண்டா? தமிழ்நாட்டில் கூட்டணி மாற்றம் வருமா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து தங்கபாலு கூறியதாவது:-

டெல்லியில் சோனியாகாந்தியை ஜெயலலிதா சந்தித்தது சாதாரணமாக நிகழ்ந்தது. தேர்தல் ஆணைய விழாவில் பல தலைவர்கள் பங்கேற்றனர். தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது மரியாதை நிமித்தமாக பேசிக்கொள்வது வழக்கமானதுதான். அதேபோலதான் இருவரும் பேசிக்கொண்டனர். இதில் வேறு எந்த முக்கி யத்துவமும் இல்லை. ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கூட்டணி. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. இதில் எந்த பாதிப்பும் வராது என்று தங்கபாலு கூறினார்.





Sunday, January 24, 2010

நாகர்கோவிலில் கவிஞர் கயல்விழி அழகிரி


நாகர்கோவில் வடசேரி வஞ்சியாதித்தன் புதுத்தெருவில் நாளை (25-ந் தேதி) மாலை 5 மணிக்கு தி.மு.க. வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.

கூட்டத்துக்கு நகர செயலாளர் வக்கீல் மகேஷ் தலைமை தாங்குகிறார். கவிஞர் கயல்விழி அழகிரி, அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

ஹெலன்டேவிட்சன் எம்.பி, ராஜன் எம்.எல்ஏ, மாவட்ட பொருளாளர் பொன் சின்னத்துரை, அவைத் தலைவர் ஜோசப்ராஜ், துணை செயலாளர்கள் புஷ்பலீலா ஆல்பன், அருள்ராஜ், ஜோசப்ராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

கூட்டத்தில் வேளாண் விற்பனை குழு தலைவர் ஜி.எம்.ஷா, முன்னாள் எம்.பி. சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.பெர்னார்டு, ரெஜினால்டு எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் பொன்.ஜீவராஜ், மரியதாசன், எப்.எம்.ராஜரெத்தினம், அஜிதா, லாரன்ஸ், கேட்சன், ஆர்.எஸ்.பார்த்தசாரதி, எம்.எம்.பால்ராஜ், வக்கீல் அசோகன், வீ.சுயம்புலிங்கம், உதய குமார்.

ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, நெடுஞ்செழியன், சற்குரு கண்ணன், ராஜேந்திரன், சிற்றார் ரவிச்சந்திரன், மனோ தங்கராஜ், ஆசைதம்பி, மணி,அழகம்மாள்தாஸ், வக்கீல் கனி, மற்றும் பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.


Wednesday, January 20, 2010

விரைவில் அ.தி.மு.க. தொண்டர்கள் இல்லாத கூடாரமாகும்


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் குழந்தைவேலு இன்று தி.மு.க.வில் இணைந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். 1972-ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அ.தி.மு.க.வில் என்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினேன். 1977 ஆம் ஆண்டு திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக என்னை நிறுத்தி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்.

அவர் மீது அன்பும் பாசமும் வைத்துள்ள லட்சோப லட்சம் தொண்டர்களும், எங்களைப் போன்ற சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் கூட பார்க்க அனுமதி மறுக்கும் ஜெயலலிதா தலைமை ஏற்று இனியும் கட்சியில் தொடர விருப்பமில்லாத லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், தலைவர் கருணாநிதி தலைமையை ஏற்று தி.மு.க.வில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள்.

அண்ணாவுக்கு பின் கழகத்தை தலைமை ஏற்று நடத்த பொறுத்தமானவர், தொண்டர்களை அரவணைத்து செல்பவர் என எம்.ஜி.ஆரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் கருணாநிதி.

அவர் 5-ம் முறையாக தமிழகத்தின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு ஏழைகள் ஏற்றம் பெற அடுக்கடுக்கான சாதனைகளாக 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டி.வி. மற்றும் எரிவாயு அடுப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப் பட்டோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்துடன், 108 உயிர் காக்கும் அவசர சிகிச்சை வாகனம், குடிசை வீடே இல்லாத தமிழகத்தை உருவாக்கிட 21 லட்சம் காங்கிரீட் வீடுகள் இலவசமாக கட்டித் தரும் திட்டத்தை தீட்டி சாமானியவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகிறார்.

தலைவர் கருணாநிதியை தலைவராக ஏற்று நான் இன்று தி.மு.க.வில் இணைக்கிறேன். அ.தி.மு.க. தொண்டர்கள் இல்லாத கூடாரமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தலைவர் கருணாநிதி தலைமையில் இணைந்து தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் பாடுபடுவேன். உண்மையான அ.தி.மு.க. அடிமட்டத் தொண்டர்களும், வாக்காளர்களும் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்து அண்ணாவின் தம்பி தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் தலைவர் கருணாநிதி தலைமையேற்று தமிழர்கள் நலன் காக்க பாடுபட வாருங்கள் என்று அழைத்து தாய் கழகமான தி.மு.க.வில் என்னை இன்று முதல் இணைத்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Monday, January 18, 2010

பொதுப்பணித்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் நடவடிக்கை


தோவாளை சானல் உடைப்பை சீரமைக்கும் பணி


பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை நீர் தோவாளை சானல் வழியாக பாசனத்துக்கு விடப்படுகிறது. இந்த சானல் நீர் தோவாளை, மயிலாடி, செண்பகராமன்புதூர், சீதப்பால், அழகப்பபுரம், கொட்டாரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவிலுள்ள நெற்பயிர் மற்றும் தொட்டப்பயிர்கள் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
தோவாளை சானலில் கடுக்கரை அருகே அனந்தபுரம் என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டது. 100 அடி நீளத்தில் 25 அடி ஆழத்திற்கு உடைப்பு ஏற்பட்டதால் சானலிளிருந்து அதிக அளவு தண்ணீர்வெளியேறியது. இதனை தொடர்ந்து தோவாளை கால்வாய்க்குரிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.
உடைப்பு ஏற்பட்ட இடத்தை அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தோவாளை சானலில் ஏற்பட்டுள்ள உடைப்பு சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சுரேஷ்ராஜன் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். அதன் படி மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி

கன்னியாகுமரி அந்தோணியார் தெருவில் மீனவர்கள் வசித்து வரும் பகுதியில் இன்று அதிகாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 20 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்தில் சிக்கி லூசியான் (வயது 65) என்ற மீனவர் பலியானார்.
இத்தகவல் குறித்து அறிந்ததும் அமைச்சர் சுரேஷ்ராஜன், கலெக்டர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை கேட்ட அமைச்சர் சுரேஷ்ராஜன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதன்பின்பு தீவிபத்தில் சிக்கி பலியான மீனவர் லூசியான் வீட்டுக்கு சென்ற அமைச்சர் சுரேஷ்ராஜன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்பு விபத்து நிவாரண நிதி உதவியாக ரூ.1 லட்சத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஹெலன் டேவிட்சன் எம்.பி, கன்னியாகுமரி பங்கு தந்தை லியோன் எஸ்.கென்சன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரை பாரதி, கன்னியாகுமரி தி.மு.க. செயலாளர் ஜே.ஜே.ஆர். ஜஸ்டின், ஆர்.டி.ஓ. நடராஜன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்ட வழங்கல் அதிகாரி பவானி ஸ்ரீஜா, கொட்டாரம் பேரூராட்சி தலைவர் யோபு, வார்டு கவுன்சிலர்கள் மெல்பின், சகாய பரிமளதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Monday, January 11, 2010

பொய்யே உன் பெயர்தான் ஜெயலலிதாவோ?

சட்டசபையில் தொடரின் கடைசி கூட்டம் இன்று நடந்தது. அப்போது கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.இதில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது:-

கவர்னர் உரையில் மக்களுக்கு பயன்தரும் திட்டம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு கூறப்பட்ட திட்டங்களே இந்த ஆண்டும் உள்ளது. இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு முதல்வரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில் அப்படி கிடையாது.

எங்கள் ஆட்சியிலும் உழவர் பாதுகாப்பு திட்டம் அறிமுகம் செய்தோம். அதற்கு முதல்- அமைச்சரின் திட்டம் என்றுதான் வைக்கப்பட்டதே தவிர என் பெயர் சூட்டப்படவில்லை.

மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காகத்தான் திட்டங்கள் கொண்டு வருகிறோம். இதில் முதல்வரின் பெயரை சூட்டுவது சரியா?

அமைச்சர் பொன்முடி:- உங்கள் ஆட்சிக்காலத்தில் சந்தியா போக்குவரத்துக் கழகம், ஜெ.ஜெ. டிரான்ஸ் போர்ட், ஜெ.ஜெ. நெல் என்று பெயர் சூட்டப்பட்டது. தயவு செய்து நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். எம்.ஜி.ஆர். திரைப்பட நகருக்கு கூட ஜெயலலிதா நகரம் என்று சூட்டப்பட்டதே?

எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் பெயர் வைக்கப்பட்டுள்ளதே? அதையும் வேண்டாம் என்று சொல்கிறீர்களா? (அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்தினார்)

ஜெயலலிதா:- அமைச்சர் பொன்முடி முற்றிலும் தவறான தகவல்களை தருகிறார். நான் முதல்வராக இருந்தபோது.... (அமைச்சர் ஐ.பெரியசாமி பேச எழுந்தார். உடனே அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

ஐ.பெரியசாமி:- உழவர் பாதுகாப்புத் திட்டம் கொண்டு வந்ததும் கலைஞர்தான்.
பொன்முடி:- எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்தவர். தவறான தகவலை இந்த அவையில் சொல்லக்கூடாது. தவறு இருந்தால் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அவரது ஆட்சியில் அவரது பெயரை சூட்டவில்லை என்கிறாரே? அதற்கு பொறுப்பு ஏற்று நிரூபித்தால் அரசியலை விட்டு வெளியேற தயாரா?

(அ.தி.மு.க.வினர் கடுமையாக எதிர்த்து கூச்சலிட்டனர். பதிலுக்கு தி.மு.க.வினரும் எழுந்து கோஷமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார்).

ஜெயலலிதா:- அமைச்சர் பொன்முடி மீண்டும் தவறான தகவலை சொல்கிறார். 1991-ம் ஆண்டு நான் முதன் முதலாக பொறுப்பேற்றதும் எம்.ஜி. ஆர். கொண்டு வந்த சத்துணவுக்கு அவரது பெயரை சூட்டினேன். நான் ஆட்சிக்கு வந்தபோது திரைப்பட கல்லூரி என்றுதான் இருந்தது. அந்த பெயர் மாற்றப்படவில்லை.

என் தாயார் பெயரில் போக்குவரத்துக் கழகத்துக்கு பெயர் சூட்டியதாக கூறுவதும் தவறானது. இதற்கு பொன்முடி பொறுப்பு ஏற்பாரா?

அமைச்சர் பரிதி இளம் வழுதி:- தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா பல்கலைக்கழகத்துக்கும் நானே வேந்தர் என்று அறிவித்தீர்களே?

ஜெயலலிதா:- அமைச்சர் பரிதி இளம் வழுதி கூறுவதும் முற்றிலும் தவறான குற்றச் சாட்டு. அவரும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். தெரிந்தே உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்கிறார்கள்.

அவர்களது சவால்களை நான் ஏற்க வேண்டியதில்லை. அவர்கள் தவறான தகவல் சொல்வதால் அவர்கள்தான் அரசியலை விட்டு விலக வேண்டும்.
பொன்முடி:- உங்கள் ஆட்சியில் உங்கள் பெயரை சூட்டியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க நான் தயாராக உள்ளேன்.

ஜெயலலிதா:- மொத்தத்தில் இருக்கிற முதல்- அமைச்சர் பெயரை ஒரு திட்டத்துக்கு சூட்டுவது பொருத்தம் இல்லாதது.இங்கு பேசிய உறுப்பினர் கொடை நாட்டில் சென்று நான் தங்குவதாக குறை சொல்கிறார். கொடை நாட்டில் நான் தங்குவதில் என்ன தவறு உள்ளது. அது தமிழ்நாட்டில்தானே இருக்கிறது. முதல்- அமைச்சரும், பொன்முடியும் சென்று பெங்களூரில் போய் தங்குகிறீர்களே? அது என்ன தமிழ் நாட்டிலா உள்ளது?

(துரைமுருகன் பேச எழுந்தார். இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

துரைமுருகன்:- நீங்கள் ஆந்திராவில் திராட்சை தோட்டத்துக்கு சென்று தங்கினீர்களே? அது என்ன தமிழ்நாட்டிலா உள்ளது.

ஜெயலலிதா:- இப்படி குறுக்கீடு செய்து கொண்டே இருந்தால் நான் எப்படி பேசுவது! அற்ப விஷயங்களுக்கு எல்லாம் பேசி எதிர்க்கட்சி தலைவரின் நேரத்தை வீணடிக்கிறீர்களே?

துரைமுருகன்:- வழக்கமாக எதிர்க்கட்சி தலைவர் பேசிவிட்டு உடனே சென்று விடுவார். அதனால்தான் இப்போதே சொன்னேன். அற்பத்தனமாக பேசியதாக சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் எப்படி பேசுகிறாரோ அதே பாணியில்தான் நானும் பேசினேன்.

(அப்போது அ.தி.மு.க.- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து கூச்சலிட்டனர்)

சபாநாயகர்:- நீங்கள் கவர்னர் உரை மீது பேசுங்கள்.

ஜெயலலிதா:- நான் கவர்னர் உரை மீதுதானே பேசுகிறேன். முதலில் அவர்களை உட்காரச் சொல்லுங்கள்.

பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்ததாக கூறினார். எங்கள் ஆட்சியில்தான் முதலில் இதை அறிமுகம் செய்தோம். முதலில் 3 ஆணையாளர்களையும் நியமனம் செய்தேன்.

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து குண்டம் சட்டம் பாயும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். எனது ஆட்சியில் திருட்டு வி.சி.டி.யை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தேன்.2004-ல் திருட்டு வி.சி. டி.யை தடுக்க சட்டத்தில் குண்டர் சட்டத்தை சேர்த்தது நான்தான். இதனால் திருட்டு வி.சி.டி. தொழில் நிறுத்தப்பட்டது.

2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திருட்டு வி.சி.டி. மீண்டும் கொடிகட்டி பறக்கத் தொடங்கிவிட்டது. மதுரை, சென்னையில் உள்ள அதிகார மையம் இதை நடத்துகிறது.

தமிழ்நாட்டில் திரைப்பட துறையினர் முதல்வருக்கு அடுத்த மாதம் பாராட்டு விழா நடத்துகிறார்களாம். திருட்டு வி.சி.டி.யை ஒழித்ததற்கு பாராட்டு விழாவாம். அப்படி பாராட்டு விழா நடத்துவதாக இருந்தால் எனது தலைமையிலான ஆட்சி எடுத்த முடிவுக்குத்தான் பாராட்டாக அமையும். வேறு எதற்கு பாராட்டு?

(அப்போது குறிக்கிட்டுப் பேச பரிதி இளம் வழுதி எழுந்தார்)

ஜெயலலிதா:- என்னங்க இது ரன்னிங் கமென்டரி மாதிரி... ஒவ்வொன்றுக்கும் எழுந்திருக்கிறார்.

பரிதிஇளம்வழுதி:- திருட்டு வி.சி.டி.க்கு தி.மு.க. வின் அதிகாரமையம்தான் காரணம் என்று பேசுகிறார். நீங்கள் அந்த தொழிலை செய்ததால் உங்கள் ஆட்சியில் அந்த தொழில் இல்லை. (அ.தி. மு.க.வினர் எழுந்து கடும் கூச்சல்)

ஜெயலலிதா:- பரிதி இளம்வழுதி தன் தரம் தாழ்ந்த பேச்சுக்களை பேசுகிறார். இதை சொல்ல அவருக்கு தகுதி இல்லை.

சபாநாயகர்:- நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்க வேண்டும் (இதற்கும் அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

பரிதிஇளம்வழுதி:- நீங்கள்தான் தரம் தாழ்ந்து அற்பத்தனமாக பேசுகிறீர்கள்.
ஜெயலலிதா:- (பரிதியை பார்த்து) அவர் அவ்வளவுதான். உங்கள் பேச்சுக்கு பதில் சொல்வதே தவறு. (அதற்குள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் இருவரும் இருக்கையை விட்டு எழுந்து முன் வரிசைக்கு ஓடி வந்தனர்)

சபாநாயகர்:- நீங்கள் இருவரும் உங்கள் இருக்கையில் சென்று அமருங்கள். (இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது)

ஜெயலலிதா:- ஆளும் கட்சி உறுப்பினர்கள் தன்னை புகழ்ந்து பேசவேண்டாம் என்று முதல்வர் கூறியுள்ளார். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆளும் கட்சியினர் புகழ்வது மட்டும் அவருக்கு பிடிக்காது போலும். தமிழ் திரைப்பட கலைஞர்கள் புகழ்ந்து பேசினால்தான் முதல்வருக்கு பிடிக்கும்போலும்.

அமைச்சர் அன்பழகன்:- திரைப்பட கலைஞர்கள் புகழ்ந்தால்தான் பிடிக்கும் என கூறுவது எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் உள்ளது.

ஜெயலலிதா:- இலவச கான்கிரீட் வீடுகள் 21 லட்சம் பேருக்கு கட்டித்தரப் போவதாக அறிவித்துள்ளீர்கள். முதல் கட்டமாக 3 லட்சம் வீடு கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு வீட்டுக்கு ரூ. 60 ஆயிரம் என்றாலும் இவ்வளவு வீடுகளையும் கட்ட 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் தேவைப்படும். இந்த திட்டம் ஏழைகளுக்கு நல்ல திட்டம்தான். இந்த திட்டத்துக்கு எங்கிருந்து பணம் வரப்போகிறது? சொந்த பணத்தில் இருந்து செலவு செய்வார்களா? (இப்படி சொல்லி விட்டு ஜெயலலிதா மேலும் ஒரு வார்த்தையை சொன்னார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜெயலலிதா பேசிய அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்)

அமைச்சர் அன்பழகன்:- ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு போடும்போதும், இதற்கு பணம் எங்கிருந்து வரும் என்று கேட்டீர்கள். ஆனாலும் கலைஞர் ஆட்சியில் 2 ரூபாய்க்கு மட்டுமல்ல, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு பணம் எப்படி வருகிறதோ... அதே போல இலவச வீடு கட்டும் திட்டத்துக்கும் பணம் வரும். வீடுகளை கட்டிக் கொடுப்போம்.ஜெயலலிதா:- தமிழ்நாட்டில் தற்போது 83 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. இதற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டியதுள்ளது. தற்போது கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிவிட்டது. இதனால் மாதாந்தோறும் 20 ஆயிரம் கோடி வட்டி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இதற்கு காரணம் பயன் உள்ள திட்டங்களுக்கு செலவு செய்யாமல் எந்த பயனும் இல்லாத இலவச திட்டங்களுக்கு செலவு செய்வதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க.வின் தவறான கொள்கைகளால் வருவாய் இழப்பும், வரிச்சுமையும் வேலை இல்லா திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் பல மடங்கு அதிகரித்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி விகிதம் 11.85 சதவீதமாக இருந்தது.

தற்போது நமது வளர்ச்சி விகிதம் 4.55 சதவீதமாக குறைந்துவிட்டது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநில வளர்ச்சி கூட பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி கடை கோடியில் உள்ளது.
நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமை எத்தனை கோடி?

21 லட்சம் இலவச வீடுகள் கட்ட பணம் எப்படி வரும்?

தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது ஏன்?

55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 306 ஏக்கர் நிலம் மட்டுமே இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் - அமைச்சர் கருணாநிதி:- 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக முன்பு ஆட்சி செய்த அ.தி.மு.க. பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. அது உண்மை என்று நம்பி அதை நாங்கள் ஏழை- எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாக சொன்னது உண்மை.

ஜெயலலிதா:- 55 லட்சம் ஏக்கர் அரசு தரிசு நிலம் இருப்பதாக நாங்கள் சொல்லவில்லை. பட்டா மற்றும் தரிசு நிலங்களை பண்படுத்தி கொடுப்போம் என்றுதான் கூறினோம்.

கருணாநிதி:- 55 லட்சம் ஏக்கர் பண்படுத்தப்பட்டால் அதை பாமரர்களுக்கு கொடுக்கலாம் என்று எண்ணிதான் நாங்கள் அறிவித்தோம்.


ஜெயலலிதா:- அந்த நிலம் அரசிடம் இருக்கிறது என்று நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் கொடுப்பதாக சொன்ன நிலத்தை எப்போது பகிர்ந்து கொடுக்க போகிறீர்கள்?

அன்பழகன்:- 53 லட்சம் ஏக்கர் நிலம் எங்கே உள்ளது என்று காட்டுங்கள். நாங்கள் பிரித்துக் கொடுக்கிறோம்.

ஜெயலலிதா:- அரசு காலி பணி இடங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதால் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக வேலைக்கு தேர்வு செய்யப்பட உள்ள 2 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும்.

அன்பழகன்:- 2 லட்சம் காலி இடங்களுக்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் சொல்லப்படவில்லை. புதிதாக இளைஞர்களை நியமித்த பிறகு நிரப்பப்படாமல் உள்ள ஓரிரு இடங்களில் மட்டும் தற்காலிகமாக ஓய்வு பெற்ற ஊழியர்களை நியமிக்கலாம் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா:- தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு வானத்தை நோக்கி செல்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் நல்ல பொருளா தார கொள்கைகளை கடைபிடித்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் தவறான கொள்கைகள் கடை பிடிக்கப்பட்டு கடன்கள் வாங்கப்படுகின்றன. இந்த கடன்களை திருப்பி செலுத்த முடியுமா? என்ற நிலை உருவாகி உள்ளது.தேர்தலில் ஓட்டுப்போட ஒருவர் 5 ஆயிரம் ரூபாய் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். என் ஆட்சியில் 30 ரூபாய்க்கு சர்க்கரை வாங்கலாம். தற்போது 90 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியது உள்ளது. இப்படி 5 வருடத்துக்கு கணக்கிட்டால் ரூ. 3,500 சர்க்கரைக்கு மட்டுமே அதிகமாக கொடுக்க வேண்டியது உள்ளது. மற்ற அத்தியாவசிய விலையும் பல மடங்கு உயர்ந்து இருப்பதால் அவர் வாங்கிய பணத்தை விட 5 மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டியது இருக்கிறது.

எனவே கவர்னர் உரையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது பற்றி எதுவும் சொல்லவில்லை. ரேஷன் கடைகளில் 50 ரூபாய்க்கு 10 மளிகை பொருள் கொடுப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். 1 மாதத்திலேயே நிறுத்தப்பட்ட இல்லாத திட்டத்தை சொல்லி இருக்கிறீர்கள்.

அமைச்சர் எ.வ.வேலு:- 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி மட்டும் அல்ல பருப்பு, உளுந்து போன்ற பலப் பொருட்களை சலுகை விலையில் கொடுக்கிறோம். 50 ரூபாய்க்கு 10 மளிகை பொருள் கொடுக்கும் திட்டம் இப்போதும் இருக்கிறது. முன்னாள் முதல்- அமைச்சர் கடைக்கு செல்லாததால் இது தெரியவில்லை.
ஜெயலலிதா:- ரவை, கோதுமை மாவு என்று எதை கேட்டாலும் இருப்பில் இல்லை என்றுதான் பதில் வருகிறது. அதுதான் உண்மை.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. உச்சக்கட்டமாக இப்போது காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. சமீபத்தில் நெல்லை அம்பாசமுத்திரம் அருகே காவல் ஆய்வாளர் வெற்றிவேல் வெடிகுண்டு வீசப்பட்டு, அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. அந்த நேரத்தில் அங்கு நின்ற தி.மு.க. அமைச்சர்கள், ஆட்சி தலைவர் ஆகியோரும் (ஜெயலலிதா ஒரு வார்த்தையை கூறினார். அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் விளக்கம் அளித்தனர்)

ஜெயலலிதா:- யாருமே உதவி செய்யாதது மனிதாபிமானம் இல்லாத செயல்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்:- எதிர்க்கட்சி தலைவர் சொல்வது தவறான தகவல். இவர் நேரில் பார்த்தாரா?

(இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். ஆளுங்கட்சி தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஒரே கூச்சலாக இருந்தது. ஜெயலலிதா மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை கூறினார்.

துரைமுருகன்:- உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு. ஒரு நிகழ்ச்சி எதிர்பாராமல் நடக்கிறது. கொலையாளிகளை போலீசார் விரட்டி செல்கிறார்கள். வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் ஏழு, எட்டு வெடிக்காமல் கிடக்கின்றன. அங்கு வந்த சுகாதார அமைச்சர் போன் செய்து கொண்டு இருக்கிறார்.

அமைச்சர் மைதீன்கானும் பாதுகாப்புக்காக வந்த போலீஸ் ஜீப்பில் காயம்பட்ட ஆய்வாளரை ஏற்றி டாக்டரையும் அனுப்பி வைக்கிறார். இவ்வளவு உதவியும் செய்த பிறகு ஜெயலலிதா குற்றஞ்சாட்டுகிறார். (அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்)

சபாநாயகர்:- அமைச்சர் விளக்கம் அளித்த பிறகும் ஒரே பிரச்சினை பற்றி தொடர்ந்து பேசுகிறீர்கள். வேறு வேறு பிரச்சினைக்கு வாருங்கள். (மீண்டும் ஜெயலலிதா இந்த பிரச்சினையை பேசினார்)

அமைச்சர் மைதீன்கான்:- அங்கு காயம் பட்டு கிடந்தவருக்கு சிகிச்சை அளிக்க உடனடி ஏற்பாடு செய்து என் வாகனத்தில் என் உதவியாளரை வைத்து ஏற்றி அனுப்பினேன். அவர் காலில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் எங்களுக்கு கிடைத்த சால்வை மூலம் கட்டுப்போட சொன்னோம். மதியம் 2.50 மணி வரை அம்பாசமுத்திரம் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு பாளையங்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டார். மனிதாபிமானம் அடிப்படையில் நாங்கள் செய்ததை கொச்சைப்படுத்த வேண்டாம். மனசாட்சி இல்லாதவர்கள்தான் இப்படி சொல்வார்கள்.

அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம்:- உங்கள் ஆட்சியின் போது மகாமகம் குளத்தில் 100 பேர் மூழ்கி செத்தார்களே, நீங்கள் காப்பாற்றினீர்களா?

அமைச்சர் துரைமுருகன்:- மகாமகம் குளத்தில் 100 பேர் செத்தார்கள். அப்போது இவர்கள் ஓடிப்போய் காப்பாற்றினார்களா? அதுபற்றி பதில் சொல்லத்தயாரா?

ஜெயலலிதா:- நான் முதல்- அமைச்சராக இருந்தபோது வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படைக்கு தவைராக இருந்த தேவாரம் காயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி நல்ல சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து நேரில் சென்று அவருக்கு ஆறுதலும் கூறினேன்.

(அதற்கு எதிராக ஆளுங்கட்சியினர் குரல் கொடுத்தனர். அதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கூச்சல் குழப்பமாக இருந்தது).

துரைமுருகன்:- வால்டர் தேவாரம் பற்றி கேட்கவில்லை. மகாமகம் குளம் பற்றி கேட்கிறோம்.

ஜெயலலிதா:- ஒருவர் காயம்பட்டு உயிருக்கு துடித்து கொண்டிருக்கிறார் உயிருக்கு போராடும் அவர் தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் பாட்டிலை எடுத்து வீசுகிறார்கள். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம்.

துரைமுருகன்:- அவர் துடிதுடித்தை நானும் டி.வி.யில் பார்த்தேன். அமைச்சர்களுடன் சென்ற அதிகாரிகள்தான் அவரை வாகனத்தில் ஏற்றினார்கள். யாரும் போகவில்லை என்று சொல்வது அபாண்டம்.
(தொடர்ந்து இதே குற்றச்சாட்டை கூறிய ஜெயலலிதா சில கோரிக்கைகளை வைத்தார். அவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன)

தொடர்ந்து பேசிய ஜெயலலிதா விலைவாசி உயர்வு, மின்சார பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பேசினார். பல்வேறு திட்டங்கள் பற்றியும் குறை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் அடுத்து ஆட்சிக்கு வருவோம் என்று கணக்கு போட்டு 21 லட்சம் வீடுகள் கட்டுவதாக சொல்லி இருக்கிறார்கள். மக்களை எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தொண்டாற்றுவோம் என்று கூறிவிட்டு அவையில் இருந்து ஜெயலலிதா வெளியே சென்றார். அவருடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களும் சென்றனர்.

அமைச்சர் அன்பழகன்:- எதிர்கட்சி தலைவர் 1 மணி நேரம் பேசினார். அவருடைய கருத்துக்களை மறுத்து உண்மையான புள்ளிவிவரங்களை சொல்லலாம் என்று இருந்தேன். அதற்குள் வெளியே சென்றுவிட்டார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Sunday, January 10, 2010

தேமுதிகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சிற்கே இடமில்லை

தேமுதிகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சிற்கே இடமில்லை என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க நினைப்பவர்கள் நிச்சயம் தோற்பார்கள் எனவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி 2011ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலிலும் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் காங்கிரசை பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்து 3-வது பெரிய கட்சியாக உள்ளது. 20 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை தொடர்ந்து பலப்படுத்துவதில் நான் பாடுபட்டு வருவதை சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் அறிவார்கள்.

சமீபத்தில் வெளியான ஒரு வாரப்பத்திரிகையில் தி.மு.க.-காங்கிரஸ் உறவை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மத்திய மந்திரி ப.சிதம்பரம் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவது போல் குறிப் பிட்டுள்ளார்கள்.

சிதம்பரம் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட வில்லை. அவர் மிகச்சிறந்த மத்திய மந்திரியாக செயல்பட்டு வருகிறார். மத்திய மந்திரி வாசனும் சிறந்த முறையில் மந்திரிசபையில் செயல்பட்டு வருகிறார்கள்.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் நிறைவேற்றி வரும் சாதனைகளை சொல்லி கடந்த 10 இடைத்தேர்தல்களில் வெற்றி வாகை சூடியுள்ளோம். இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணி.

இந்த கூட்டணியை உடைப்பதற்கு சதி செய்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் கனவு பலிக்காது. சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் தலைமையை ஏற்று காங்கிரஸ் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

தமிழகத்திலும் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் தான் இந்த சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி தான். தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.

வேறு கட்சிகள் எங்களுடன் இணைய விரும்பினாலும் அதுபற்றி சோனியாகாந்தியும், எங்கள் கூட்டணி தலைவர் கருணாநிதியும் பேசி முடிவு செய்வார்கள். காங்கிரஸ் தலைமையை ஆதரிப்பவர் களை நாங்கள் வரவேற்போம்.

பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். இந்த இடைத்தேர்தல் மட்டு மல்ல. வரும் 2011 தேர்தலிலும் எங்கள் கூட்டணி அமோக வெற்றிபெறும்.

இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.

Thursday, January 7, 2010

2,200 கோடியில் தொழிற்சாலை -மத்திய அமைச்சர் அழகிரி



"மத்திய அமைச்சர் அழகிரியின் முயற்சியால், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, கவர்னர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது: தென் மாவட்டங்களை தொழில்மயமாக்குவதன் மூலம், அங்கு நிலவும் சமூகப் பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என, தமிழக அரசு நன்றாக உணர்ந்துள்ளது. அதனால், தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளை நிறுவ முன்வருவோருக்கு, கூடுதல் சலுகைகள் அடங்கிய, "தொகுப்புச் சலுகைகள்' வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.


இதன் பயனாக, "வீடியோகான்' நிறுவனம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் கலர் "டிவி' மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளது. தமிழ்நாடு கனிம நிறுவனம், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கருங்கல் வெட்டுதல் மற்றும் மெருகேற்றும் பிரிவை துவக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் முயற்சியால், இந்தோனேஷியா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு தொழில் நிறுவனம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் டிராக்டர்கள், ஸ்டீல் அலாய்ஸ், போர்ஜிங்ஸ் ஆகியவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவ முன்வந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டானில், ஏ.டி.சி., டயர்ஸ் என்ற நிறுவனம், கடந்த மாதம் உற்பத்தியை துவக்கியுள்ளது. இவ்வாறு கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 5, 2010

முதல்வர் கலைஞரின் கேள்வி பதில்கள்


கேள்வி:- கரும்பு டன் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்று கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் தமிழக அரசு ரூ.1,437 என்று மட்டுமே விலை நிர்ணயித்திருப்பதாகவும் என்.வரதராஜன் கூறியிருப்பது பற்றி?.

பதில்:- தமிழக அரசு ரூ.1,437 என்று மட்டுமே ஒரு டன் கரும்புக்கு விலை நிர்ணயம் செய்திருப்பதாகச் சொல்லியிருப்பதே தவறு. 2009-2010 அரவைப் பருவத்திற்கு மாநில அரசின் பரிந்துரை விலையினை நிர்ணயம் செய்து 29-9-2009 அன்று அரசாணை எண் 190 பிறப்பிக்கப்பட்டது. 2009-2010 அரவைப் பருவத்திற்கு 9.5 சதவீதம் சர்க்கரைக் கட்டுமானமுள்ள கரும்புக்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச சட்டப்பூர்வ விலையாக ரூ.1,077-60 என்று மத்திய அரசு நிர்ணயம் செய்திருந்தது. (இந்தத் தொகை பின்னர் மத்திய அரசினால் சற்று அதிகரிக்கப்பட்டது. அந்தத் தொகை தமிழக அரசு கொடுத்து வரும் தொகையை விடக் குறைவுதான்) சர்க்கரைக் கட்டுமானம் அதிகமாகும் ஒவ்வொரு 0.1 சதவீத கட்டுமானத்திற்கும் டன் ஒன்றுக்கு ரூ.11.30 ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு இதனைக் கவனமாக பரிசீலித்து, தமிழக கரும்பு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச விலையைவிடக் கூடுதலாக ரூ.359.80 உயர்த்தி, 9.5 சதவீதம் சர்க்கரைக் கட்டுமானம் உள்ள கரும்புக்கு டன் ஒன்றுக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.1,437.40 என்று நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டது.

மேலும் 9.5 சதவீதம் சர்க்கரை கட்டுமானத்திற்குக் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 0.1 சதவீத சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.11.30 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

கரும்பு விவசாயிகளின் நலனிலே மேலும் அக்கறை கொண்டு, மாநில அரசின் பரிந்துரை விலையுடன் சராசரி வாகன வாடகை டன் ஒன்றுக்கு ரூ.90, மற்றும் கூடுதல் கட்டுமானம் அடிப்படையில் அளிக்கப்படும் சராசரி ஊக்கத் தொகை ரூ.22.60-ஐ சேர்த்து 2009-2010 அரவைப் பருவத்திற்கு கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு தற்போது ரூ.1,550 கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே என்.வரதராஜன் 1,437 ரூபாய் என்று சொல்லியிருப்பது சரியான தகவல் அல்ல.

2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைந்த போது 9-11-2001-ம் நாள் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலை மட்டும் தரப்படும், மாநில அரசின் பரிந்துரை விலையை வழங்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு ஜெயலலிதா தெரிவித்தார்.

அ.தி.மு.க. அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி 2001-2002 முதல் 2004-2005 வரை நான்காண்டு காலம் மத்திய அரசின் சட்டபூர்வ குறைந்தபட்ச விலையான ரூ.795 மட்டும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

உச்சநீதி மன்றம் கரும்பு விலை நிர்ணயம் சம்பந்தமாக அளித்த தீர்ப்பில் மத்திய அரசின் சட்டபூர்வ குறைந்தபட்ச விலையோடு மாநில அரசு கூடுதலாக பரிந்துரை வழங்கலாம் என 5-5-2004 அன்று தீர்ப்பு வழங்கிய பிறகு, அந்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தாமல், அதன் பிறகு 16 மாத காலம் சும்மாயிருந்துவிட்டு, 2006-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு ஒரு டன் கரும்புக்கு 1014 ரூபாய் என்று ஜெயலலிதா ஆட்சியிலே அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதே தவிர அந்தத் தொகை வழங்கப்படவில்லை.

அதனால் அந்த நான்காண்டுகளுக்கு மட்டும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் ஏறத்தாழ ரூ.440 கோடி என்பதை என்.வரதராஜன் வசதியாக மறந்துவிட்டு - இடைத் தேர்தலில் அந்த ஜெயலலிதா கட்சியின் வேட்பாளருக்காக தனியாக மேடை போட்டு பிரசாரம் செய்ததை மறக்க முடியவில்லை.

கேள்வி:- கரும்பு விலை ரூ.1,437 என்று தமிழகத்தில் விலை நிர்ணயம் செய்திருப்பது இதர மாநிலங்களைக் காட்டிலும் மிகக் குறைவான தொகையா?.

பதில்:- மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஆந்திராவிலும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு தமிழகத்தை விட அதிக கொள்முதல் விலை தருவதாக என்.வரதராஜன் அவரது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். ஆனால் அதிக அளவிற்கு கரும்பு உற்பத்தி செய்யக் கூடிய மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களிலே மாநில அரசின் சார்பாக எந்தப் பரிந்துரை தொகையையும் நிர்ணயம் செய்து தருவதில்லை என்பது தான் நமது அரசுக்குக் கிடைத்த உண்மையான தகவல் என்பதை மாத்திரம் தெரிவிக்க விரும்புகிறேன்.

கேள்வி:- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, அபராத நிலுவையை முழுமையாகச் செலுத்தினாலும், மானிய உதவி கிடைக்கும் வரை உற்பத்தி நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறதே?.

பதில்:- திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடை தொழிலையொட்டி உருவான சாயப்பட்டறைகளால் வெளியான கழிவு நீர், சுத்திகரிப்பு செய்யாமல் நொய்யல் ஆற்றில் விடப்பட்ட காரணத்தால், ஆற்று நீரும் மற்றும் ஆற்றுக்கு அருகில் உள்ள விளை நிலங்களும் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு நீதிமன்றம் வரை செல்ல நேரிட்டது. நீதிமன்றத்தில் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சார்பாக எந்தவித கழிவு நீரும் ஒரு சொட்டு கூட வெளியேறாதவாறு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்தார்கள்.

அதனையேற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் 31-7-2007-க்குள் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று உத்தரவிட்டு - இதுவரை மண்ணையும், நீரையும் மாசுபடுத்தியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவும் கூடுதலாக அபராதத் தொகையும் விதித்தார்கள். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சாயப்பட்டறை உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.

அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகள் நடைபெற்றது. இறுதித் தீர்ப்பில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் விதித்த அபராதத் தொகை அனைத்தையும் செலுத்தி, 6-1-2010-க்குள் முழுமையாக சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து ஒரு சொட்டு கழிவு நீர் கூட வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவின்படி சாயப் பட்டறைகளின் கழிவு நீரை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை வங்கியின் கடன் உதவியோடும், மற்றும் தங்களுடைய சொந்தச் செலவிலும் கடந்த ஆறேழு ஆண்டுகளாக சாயப் பட்டறை உரிமையாளர்கள் மேற்கொண்டார்கள்.


அப்போதைய அரசிடமிருந்து எவ்வித நிதி உதவியும் இவர்கள் பெற முடியவில்லை. 2006-ம் ஆண்டு மே திங்களில் தமிழகத்தில் ஆட்சி அமைந்த பிறகு, பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட நிதி உதவி அளிக்கவேண்டுமென்று இந்தியப் பிரதமருக்கு நான் கடிதங்கள் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக துணை முதல்வர் தம்பி மு.க.ஸ்டாலினும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தம்பி தயாநிதிமாறனும் இந்தியப் பிரதமரையும், மத்திய நிதி அமைச்சரையும் நேரில் சந்தித்து இப்பிரச்சினை குறித்து வலியுறுத்தியிருக்கிறார்கள்.


இவ்வாறு எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனாக, மத்திய அரசு, இதுவரை பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க சாயப்பட்டறை உரிமையாளர்கள் செலுத்திய வட்டித் தொகையான ரூ.100 கோடியை, வங்கிக் கடனுக்கு ஈடாக சரிசெய்துகொள்ள மத்திய அரசு முன்வந்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் துணை முதல்-அமைச்சர் தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் மத்திய அமைச்சர் தம்பி தயாநிதி மாறன், அமைச்சர்கள் தம்பிகள் பொங்கலூர் பழனிச்சாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், மைதீன்கான் ஆகியோர் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள் திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்களுடன் கலந்து பேசியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் தனது பங்காக ரூ.120 கோடி மானியம் வழங்க முன் வந்துள்ளது.


இவ்வளவிற்கும் பிறகு சாயப் பட்டறை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருத்தத்தை அளிக்கக் கூடிய ஒரு செயலாகும். எனினும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தும்போது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, தீர்ப்பின் அடிப்படையில் தேவையான உதவிகளைச்செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Monday, January 4, 2010

துணை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் புகைப்படங்கள்












Saturday, January 2, 2010

மக்கள் நலனுக்காகவே ஆட்சி - முதல்வர் கருணாநிதி


வருவாய்த்துறை சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழ்பவர்களுக்கு, இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா, சிந்தாதிரிப் பேட்டையில் நேற்று நடந்தது. விழாவில், பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இலவச வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம், கடந்த 2001, 2002ம் ஆண்டில் நடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது. பின் 2004ம் ஆண்டு, "பார்லிமென்ட்' தேர்தலை கருத்தில் கொண்டு, 2003ம் ஆண்டு அரைகுறையாக இத்திட்டம் செயல்படுத் தப்பட்டது. இப்படி தேர்தலுக்காக இல்லாமல், மக்களின் நலனுக்காக நடக்கும் இந்த ஆட்சிக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். குறையில்லாத ஆட்சி எங்கும் இல்லை. குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் இல்லாத ஆட்சி, தானே கெட்டுவிடும் என்ற, திருக்குறளின் பொருள் உணர்ந்து, இந்த ஆட்சி செயல்படுகிறது. குறைகள் இருந்தால் சொல்லுங்கள்; குற்றம் செய்தால் தண்டியுங்கள். அதற்காக, அக்குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி, அதன்மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணுவது சரியல்ல. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மக்களின் கருத்து:

தினமலரில் வெளியான மக்களின் கருத்துகள்

K kanmani,Chennai,India

புத்தன், காந்தி, ஏசுவால் மட்டும் தான் இவ்வுலகை ஆள வேண்டுமென்றால், நடக்க கூடிய காரியமா? வாயால் சொல்வது எல்லோருக்கும் எளிது. காரியத்தில் இறங்கினால் தான் அதன் கடினம் தெரியும். கழுதைக்கும், குதிரைக்கும் வித்தியாசம் தெரியாதவன் தான் கலைஞரை குறை சொல்வான்.

ஒரு ரூபாய் அரிசி சாப்பிடுற வயசான பாட்டிக்கு தான் தெரியும், பசியின் வலி. பொல்லாக்கு பேசும் புரம்போக்குக்கு தெரியாது.

டிவிக்கு அடுத்தவீடுக்கு ஓடிபோகும் குழந்தைகளுக்கு தெரியும், அங்கிருந்து விரட்டியடிக்கும் போதுள்ள வலி, உனக்கு தெரியாது.

சாராயம் நிறுத்தினா, கள்ள சாராயம் பெருகும், பல பேரின் தாலி இறங்கும். அந்த வலி கணவனை பறிகொடுத்த பெண்ணுக்குத்தான் தெரியும், புறம் சொல்லும் உனக்கு தெரியாது.


G ஸ்ரீதர்,California,United States

டான்சி நிலம் கொள்ளையடிக்கும் பொது இல்லாத ரோசம்,
அரசு பணம் ஊழல் பண்ணும்போது வராத ரோசம்,
கும்பகோணம் கொலை நடந்த போது வராத ரோசம்,
தருமபுரி கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்தபோது வராத ரோசம்,
ஒரு ரூபாய் சம்பளத்தில் ஆயிரம் ஏக்கர் கொடநாடு எஸ்டேட் வாங்கின போது வராத ரோசம்,
காஞ்சி ச‌ங்க‌ர‌ர் மேல் கொலை குற்ற‌ம் சொன்ன‌போது வ‌ராத‌ ரோச‌ம்,
அர‌சு ப‌ண‌த்தில் ஆட‌ம்ப‌ர‌ வாழ்க்கை வாழும்போது வ‌ராத‌ ரோச‌ம்,
எத்த‌னையோ பேர்க‌ளை கொலைசெய்து சொத்துக்க‌ளை கைப்ப‌ற்றிய‌போது வ‌ராத‌ ரோச‌ம்,
ஜெயா ஆட்சிகால‌த்தில் ந‌ட‌ந்த‌ இடைத்தேர்தல் ந‌ட‌ந்த‌போது வ‌ராத‌ ரோச‌ம்,
ஜெயா ஆட்சியில் ச‌ட்டச‌பையை ச‌ந்தை ச‌பையாக‌ ந‌ட‌த்திய‌போது வ‌ராத‌ ரோச‌ம்,
ஜெயா ஆட்சியிலிருந்த‌போது, காவிரியை ப‌ற்றியோ, பெரியாறு ப‌ற்றியோ எந்த‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்காத‌ போது வ‌ராத‌ ரோச‌ம்,
ஜெ.ஜெ.திரைப்ப‌ட‌ ந‌க‌ர் பேர் வ‌ச்ச‌போதோ, ச‌ந்தியா பேரில் நினைவுசின்ன‌ம் வ‌ச்ச‌போதோ வ‌ராத‌ ரோச‌ம்,
இல‌ங்கைத‌மிழ‌னைப்ப‌ற்றி பேசினாலே, பொடாவில் தூக்கிபோடும் நிலை இருந்த‌போது வ‌ராத‌ ரோச‌ம்,
இன்னும் எத்த‌னை எத்த‌னை அவ‌ல‌ங்க‌ள் ஜெயா ஆட்சியில் ந‌ட‌ந்த‌ போது வ‌ராத‌ ரோச‌ம் இப்போது தான் வ‌ருகிற‌து ஒரு சில‌ ம‌ரம‌ண்டைக‌ளுக்கு ஏன் தெரியுமா,
ஒரு ந‌ல்ல‌ ஆட்சி, ம‌க்க‌ள் ஆட்சி, காம‌ராஜ‌ரின் க‌ன‌வு ஆட்சி, அண்ணாவின் அற்புத‌ த‌ம்பியின் ஆட்சி ந‌ட‌ப்ப‌தை பாராட்ட‌ ம‌ன‌சு வேண்டும‌ல்ல‌வா?

Friday, January 1, 2010

துணை முதல்வரின் உதவி


கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம்(44); தையல் தொழிலாளி. 2007ல் நடந்த ஒரு விபத்தில், அவரது காலில் ஐந்து இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கோவையில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. வறுமையான சூழ்நிலையிலும், பல ஆயிரம் ரூபாய் செலவழித்தும் பலன் இல்லாததால், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சையைத் தொடர, அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்தனர். ஆனால், ஏற்கனவே நடந்த விபத்துக்கு, இதில் சிகிச்சை அளிக்க வாய்ப்பில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன், செம்மொழி மாநாட்டுப் பணிகள் தொடர்பான ஆய்வுக்காக, துணை முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார். அப்போது, வைத்தியலிங்கம் குடும்பத்தினர், ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட்டனர். அவர், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் வைத்தியலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, வைத்தியலிங்கத்துக்கு கோவை கங்கா மருத்துவமனையில் உயர் தர சிகிச்சை வழங்கப்பட்டது.

கங்கா மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு தலைவர் ராஜசேகர், பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு தலைவர் ராஜசபாபதி, டாக்டர் சுந்தர்ராஜன் மற்றும் குழுவினர், ஆபரேஷன் செய்தனர். தற்போது அவர், எழுந்து நடக்கும் நிலையில் உள்ளார். மீண்டும் நடக்க ஆரம்பித்த அவரை, துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்.

ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர், கோவை கங்கா மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்தார். வைத்தியலிங்கம் உட்பட பலரிடமும் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இதே திட்டத்தில் விபத்துக்கு சிகிச்சை பெறும் சண்முகசுந்தரம்(65) என்ற நோயாளி, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டார்.

முதுகெலும்பு வளைந்த ஒரு சிறுமிக்கு சிகிச்சை அளித்தது பற்றியும், ஒரு சில சிகிச்சைகளுக்கு அதிக செலவு ஏற்படுவது பற்றியும் டாக்டர்கள் விளக்கினர். அதுபற்றி விபரம் அனுப்பினால், அதைப் பரிசீலிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுபோன்று, உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் பட்டியலைத் தொகுத்து அனுப்புமாறு மத்திய அமைச்சர் ராஜா அறிவுறுத்தினார். பின், கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈரோடு தி.மு.க., பிரமுகர் கணேசன் என்பவரைப் பார்த்து நலம் விசாரித்தார்.