Friday, January 1, 2010

துணை முதல்வரின் உதவி


கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம்(44); தையல் தொழிலாளி. 2007ல் நடந்த ஒரு விபத்தில், அவரது காலில் ஐந்து இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கோவையில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. வறுமையான சூழ்நிலையிலும், பல ஆயிரம் ரூபாய் செலவழித்தும் பலன் இல்லாததால், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சையைத் தொடர, அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்தனர். ஆனால், ஏற்கனவே நடந்த விபத்துக்கு, இதில் சிகிச்சை அளிக்க வாய்ப்பில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன், செம்மொழி மாநாட்டுப் பணிகள் தொடர்பான ஆய்வுக்காக, துணை முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார். அப்போது, வைத்தியலிங்கம் குடும்பத்தினர், ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட்டனர். அவர், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் வைத்தியலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, வைத்தியலிங்கத்துக்கு கோவை கங்கா மருத்துவமனையில் உயர் தர சிகிச்சை வழங்கப்பட்டது.

கங்கா மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு தலைவர் ராஜசேகர், பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு தலைவர் ராஜசபாபதி, டாக்டர் சுந்தர்ராஜன் மற்றும் குழுவினர், ஆபரேஷன் செய்தனர். தற்போது அவர், எழுந்து நடக்கும் நிலையில் உள்ளார். மீண்டும் நடக்க ஆரம்பித்த அவரை, துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்.

ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர், கோவை கங்கா மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்தார். வைத்தியலிங்கம் உட்பட பலரிடமும் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இதே திட்டத்தில் விபத்துக்கு சிகிச்சை பெறும் சண்முகசுந்தரம்(65) என்ற நோயாளி, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டார்.

முதுகெலும்பு வளைந்த ஒரு சிறுமிக்கு சிகிச்சை அளித்தது பற்றியும், ஒரு சில சிகிச்சைகளுக்கு அதிக செலவு ஏற்படுவது பற்றியும் டாக்டர்கள் விளக்கினர். அதுபற்றி விபரம் அனுப்பினால், அதைப் பரிசீலிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுபோன்று, உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் பட்டியலைத் தொகுத்து அனுப்புமாறு மத்திய அமைச்சர் ராஜா அறிவுறுத்தினார். பின், கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈரோடு தி.மு.க., பிரமுகர் கணேசன் என்பவரைப் பார்த்து நலம் விசாரித்தார்.

No comments:

Post a Comment