Thursday, December 31, 2009

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நிகழ்வுகள்


உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வருகிற ஜூன் மாதம் கோவையில் நடக்கிறது. ஜூன் 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 5 நாட்கள் இந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி ஆலோசனைப்படி, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநாட்டு பணிகளை பல்வேறு பிரிவுகளாக நிறைவேற்ற 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதன் மூலம் மாநாட்டு பணிகள் பிரித்து கவனிக்கப்படுகிறது. மாநாட்டை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முடிவு எடுப்பதற்கான உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கலந்தாய்வு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடந்தது. முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

மாநாட்டுக்கான 21 குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்துவது பற்றி குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் கருத்துக்கள் அறியப்பட்டன. ஒவ்வொரு குழுவும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

முதல்- அமைச்சர் கருணாநிதி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். உலகம் முழுவதும் இருந்து மாநாட்டுக்கு வருபவர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்வது உள்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோ சிக்கப்பட்டன.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க தங்களது ஒப்புதல்களை தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், சவுதி அரேபியா, கென்யா, நார்வே, பின்லாந்து, பிரான்ஸ், வங்காளதேசம், நியூசிலாந்து, தென்கொரியா, ரஷியா, செக்குடியரசு, மொரீசியஸ் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

அவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பார்கள். அவர்களது சொற்பொழிவும் நடைபெறும். இவை அனைத்தும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விவரம்:-

அமைச்சர்கள் அன்பழகன், துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, பொன்முடி, மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சுதர்சனம், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி, மூவேந்தர் முன்னணி கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், இந்திய கம்யூனிஸ்டு சிவபுண்ணியம், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்.

கவிஞர்கள் வாலி, வைரமுத்து, கனிமொழி எம்.பி., பா.விஜய், குமரி அனந்தன், ஜெயகாந்தன், பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், அபிராமி ராமநாதன், நடிகர் சரத்குமார், ராமநாராயணன்.

தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்திஆதித்தன், இந்து என்.ராம், நக்கீரன் கோபால், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன், எம்.ஏ.எம்.ராமசாமி, சுப.வீரபாண்டியன், நன்னன், அவ்வை நடராஜன், காதர் மொய்தீன், பொன்னம்பல அடிகளார், பால் தினகரன், எம்.எல்.ஏ.க்கள் யசோதா, காயத்திரி தேவி, சிறப்பு அதிகாரி அலாவுதீன் உள்பட 21 குழுக்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment