Tuesday, December 8, 2009

வளர்ச்சி பணிகளில் துணை முதல்வர் ஸ்டாலின்


காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்தூரில் ரூ.233.37 லட்சத்தில் 102 சமத்துவபுர வீடுகள், ரூ.692.31 லட்சத்தில் 8 கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, 549.87 லட்சத்தில் 170 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, ரூ.27.27 லட்சத்தில் 3556 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி, ரூ.14.36 லட்சத்தில் 2,849 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, ரூ.163.53 லட்சத்தில் 2006 பேருக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.185 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடந்தது.

நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ரா வரவேற்றார். சமத்துவபுரத்தை திறந்து வைத்தும், கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் சென்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குகிறேன். விழாவில் அல்ல, மேடையில். மேடை என்று குறிப்பிட காரணம், 3556 பேருக்கும் மேடையில் நானே நின்று சுழல் நிதி வழங்குகிறேன். கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி கொடுக்கும் பணியை நிறைவேற்றி வருகிறோம்.

கடந்த ஆட்சியில் சமத்துவபுரம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 145 சமத்துவபுரங்கள் ரூ.14.54 கோடியில் சீரமைக்கப்பட்டது. பெரியார் 95 வருடங்கள் வாழ்ந்தார். அவரது நினைவாக மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். 2008&09ம் ஆண்டில் 29 சமத்துவபுரங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 19 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் 10 சமத்துவபுரங்கள் திறக்கப்படும். 2009&10 மற்றும் 2010&11ம் ஆண்டுகளில் 66 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். மகளிர் சுயஉதவிக்குழு வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மாபெரும் இயக்கமாக சுயஉதவிக்குழு வளர்ந்திருக்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். கூடுதல் ஆட்சியர் ஆனந்தகுமார் நன்றி கூறினார். விசுவநாதன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சங்கரிநாராயணன், சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment