Sunday, December 13, 2009

ஜெயலலிதாவின் ஏமாற்று ஆர்பாட்ட நாடகம்



தமிழகத்திலே உள்ள அனைத்துக் கிராமங்களிலும் தனது கட்சிக்காரர்களை விட்டு போராட்டங்கள் -ஆர்ப்பாட்டங்களை நடத்தி முடித்துவிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா வருகிற 18-ந்தேதி டெல்லியிலே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை விடுத்துள்ளார்.


மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் மீனவர்களுக்கு விரோதமான கடல் மீன் தொழில் (ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை) வரைவு சட்டமுன் வடிவை எதிர்த்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போகிறாராம்.

மீனவர்களுக்கு விரோதமாக இப்படியொரு மசோதாவை மத்திய அரசு கொண்டு வரப்போவது தெரிந்த உடனேயே நவம்பர் 19-ந்தேதியன்று தமிழக அரசின் சார்பில் மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு தமிழக முதல்வர் அவர்கள் கடிதம் அனுப்பினார்கள்.


அந்தக் கடிதத்தில் கடல்சார் மீன் வளம் (முறைப்படுத்தல் மற்றும் நிர்வாகம்) நகல் சட்டம் 2009 குறித்து தமிழக மீனவர்களின் ஐயப்பாடுகளையும், அச்சத்தையும் மத்திய வேளாண்துறை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் சரத்பவாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, இந்தப் பிரச்சினைகள் குறித்து மீன்பிடி தொழிலிலே தொடர்புடையவர்களோடு விரிவாகக் கலந்து பேசிய பிறகுதான் அனைத்தையும் உள்ளடக்கிய முற்போக்கான சட்டத்தைக் கொண்டு வரவேண்டுமென்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா அறிக்கையிலே அவர் கடிதம் எழுதியதோடு அவருடைய எதிர்ப்பு நாடகத்தை முடித்துக்கொண்டார் என்று அவருக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார். அதுவும் தவறான செய்தி. கடிதத்தை எழுதியதோடு அவர் நின்று விடவில்லை. மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை தொடர்பு கொண்டு, உடனடியாக மத்திய அமைச்சர் சரத்பவாரை சந்தித்து மீனவர்களின் பிரச் சினைகள் குறித்து விரிவாக பேசுமாறு கேட்டுகொண்டார்.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் உடனடியாக டிசம்பர் 10-ந்தேதியன்று மத்திய அமைச்சர் சரத்பவாரை சந்தித்து மீனவர்களின் நிலைமைகளை விளக்கியிருக்கிறார். கொண்டுவர உத்தேசித்த மசோதாவின் காரணமாக மீனவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதையும் விரிவாக மத்திய அமைச்சரிடம் சொல்லியிருக்கிறார்.

இப்பிரச்சினை குறித்து சரத்பவாருக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதம் பற்றியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அத்தனையையும் கேட்டு விட்டு, மத்திய அமைச்சர் தமிழக மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடம், தமிழக முதல்-அமைச்சரின் கோரிக்கைபடி, கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யமாட்டோம். இந்த மசோதா பற்றி அனைத்து முதல்வர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகளின் கருத்து கேட்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். இந்தச் செய்தி 11-ந்தேதிய அனைத்து ஏடுகளிலும் பெரிதாக வெளிவந்துள்ளது.

இத்தனை செய்திகளையும் தெரிந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா இது மீனவர்களை ஏமாற்றும் செயல் என்றும், இதற்காக டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கின்றார் என்றால் உண்மையில் மீனவர்களை ஏமாற்றுகின்ற செயல் எது, ஏமாற்றுகின்றவர் யார் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

நவம்பர் மாதம் மசோதா வரப்போகிறது என்று தெரிந்ததும் நவம்பர் 19-ந்தேதியன்றே தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் ஜெயலலிதா இந்த ஒரு மாத காலமும் சும்மாயிருந்து விட்டு, தற்போது திருச்செந்தூர் இடைத்தேர்தல் என்றதும், அங்கேயுள்ள மீனவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக டெல்லியிலே ஆர்ப்பாட்டம் என்று அறிக்கை விடுகிறார். ஆனால் தமிழக மீனவப் பெருமக்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியும்.


எத்தனை காலம்தான் ஜெயலலிதா மக்களை ஏமாற்றுவாரோ?



No comments:

Post a Comment