Wednesday, December 2, 2009

குமரி மாவட்டத்தில் துணை முதல்வர்


துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் சென்ற அவர் பிறகு அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் சென்றார். அவருக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளையில் அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தி.மு.க. வினர் திரண்டு அவரை வரவேற்றனர்.

கலெக்டர் ராஜேந்திர ரத்னூ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகவேல் ஆகியோர் மு.க.ஸ்டாலினுக்கு பூங் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ராமபுரம் ஊராட்சி லெட்சுமிபுரத்தில் ரூ.2 1/2கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குமரி மாவட்டத்தின் 3-வது சமத்துவபுரம் ஆகும்.

சமத்துவபுரத்தில் குடியிருக்கும் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவியை வழங்கினார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நல்லியை திறந்து வைத்து ரேசன் கடையையும் பார்வையிட்டார்.

அதன் பின்பு மு.க.ஸ்டா லின் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 29 சமத் துவபுரங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. அதில் 12 சமத்துவ புரங்களின் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதி 17 சமத்துவ புரங்களுக்கான பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஓடும் கூவம் ஆற்றை மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது என்னுடைய முயற்சி அல்ல. கலைஞரின் எண்ணத்தில் உதித்த கனவு திட்டமாகும். அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பின்னர் நாகர் கோவில் எஸ்.எல்.பி.பள்ளியில் நடந்த விழாவில் சமத்துவபுர பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் தேங்காய்ப்பட்டணம் துறைமுகம், புத்தேரி ரெயில்வே மேம்பாலம் உள்பட ரூ.103 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.18 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார். தமிழகத்தின் முதல் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியை நாகர்கோவிலில் அவர் தொடங்கி வைத்தார்.

விழாவில் 2418 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.33 கோடி மதிப்பிலான சுழல் நிதியை பயனாளிகளிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தில் 700 பயனாளிகளுக்கு ரூ.14 கோடியும், மன வளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு திட்டத்தில் 2 ஆயிரத்து 500 பேருக்கு ரூ.25 கோடியும், 7 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகையும், 5 பேருக்கு திருமண உதவி தொகையும், 4 பேருக்கு இறப்பு நிவாரண உதவியும் வழங்கினார்.

மாவட்ட நலிந்தோர் நல திட்டத்தில் 22 பேருக்கும், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை 467 பேருக்கும், இந்திரா காந்தி விதவை உதவித் தொகை 7 பேருக்கும், இந்திரா காந்தி ஊனமுற்றோர் உதவித் தொகை 6 பேருக்கும், ஊனமுற்றோர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் 25 பேருக்கு உதவித் தொகைகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

710 பேருக்கு கல்வி உதவித் தொகையும், 47 பேருக்கு செயற்கை கால், 7 பேருக்கு மோட்டார் பொருத்திய 3 சக்கர வாகனம், 232 பேருக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தில் உதவி, 101 பேருக்கு முத்துலெட்சுமி மகப்பேறு உதவித் திட்டத்தில் உதவித் தொகை, 41 பேருக்கு வீட்டு மனைப்பட்டா உள்பட 4 ஆயிரத்து 886 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி 76 லட்சத்து 55 ஆயிரத்து 804 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஹெலன் டேவிட்சன் எம்.பி., காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment