Monday, November 30, 2009

40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் மத்திய அமைச்சர் மு க அழகிரி


திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணனும் வந்தவாசி தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக கமலக்கண்ணனும் போட்டியிடுகின்றனர்

திருச்செந்தூர் தேரடித் திடலில் இருந்து, மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில், ஊர்வலமாகச் சென்று அனிதா ராதாகிருஷ்ணன், மனு தாக்கல் செய்தார். திருச்செந்தூர் ஆர். டி.ஓ., அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ; போன தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா தற்போது போட்டியிடுகிறார். சில அ.தி.மு.,.க வினர் கூறியதால் இந்த முடிவுக்கு வந்துள்ளார். கடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல இப்போதும் தி.மு.க., அ‌மோக வெற்றி பெறும். 40 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தி.மு.க., வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

வந்தவாசியில் தி,மு.க.,வேட்பாளர் கமலக்கண்ணன் செய்யாறுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். உணவு துறை அமைச்சர் வேலு தலைமை வகித்தார். செய்யாறு டி.ஆர்.ஓ., நாகராஜனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அமைச்சர் வேலு தி.மு.க., தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

வந்தவாசி தி.மு.க., வேட்பாளர் கமலக்கண்ணன் இன்று மனு தாக்கல் செய்தாலும், நேற்றே பிரசாரத்தில் இறங்கிவிட்டார். நேற்று அனகாவூர் ஒன்றியத்தில் உள்ள புரிசை, எச்சுர் கிராமங்கள் உள் ளிட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள தி.மு.க., - காங்., மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்

Sunday, November 29, 2009

தே.மு.தி.க. அவைத் தலைவர் திமு.க.வில் இணைந்தார்



குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. முன்னாள் அவைத் தலைவர் லயன் ராஜன். இவர் இன்று அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் சுரேஷ்ராஜன் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். அவருடன் 24-வது வார்டு முன்னாள் கவுன்சிலரும் லயன்ராஜனின் மனைவியுமான ஷீலா மற்றும் அக்கட்சியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

இணைப்பு விழா நாகர் கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நடந்தது. இதில் ஹெலன் டேவிட்சன் எம்.பி., ராஜன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் வக்கீல் மகேஷ், வேளாண் விற்பனைக்குழு தலைவர் ஜி.எம்.ஷா, கவுன்சிலர் ஜெயசிங், டேவிட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லயன் ராஜனுக்கு அமைச்சர் சுரேஷ்ராஜன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

Saturday, November 28, 2009

தி.மு.க. வெற்றிக்கு காங்கிரஸ் பாடுபடும்; முதல்வர் கருணாநிதியை சந்தித்தபின் தங்கபாலு பேட்டி


முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இன்று சந்தித்தார். காலை 10 மணி முதல் 10.30 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. அப்போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் உடன் இருந்தார்.

பின்னர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

நடைபெற இருக்கும் திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிக்காக காங்கிரஸ் பாடுபடும்.

மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை சொல்லி பிரசாரம் செய்வோம். இந்த தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெறும்.

நேற்று இரவு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் வீட்டின் மீது சில வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் புகார் செய்தோம்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேரை அந்த பகுதி போலீசார் கைது செய்து இருப்பதாகவும் முதல்வர் கூறினார். இதுபோன்ற வன்முறை கும்பல்கள் தலைதூக்க விடாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்தினோம்.

கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசன் மறைவுக்கும் அனுதாபம் தெரிவித்தோம்.

இவ்வாறு தங்கபாலு கூறினார்.


Friday, November 27, 2009

மாண்புமிகு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உதவி - உர உற்பத்தி அதிகரிப்பு


முடங்கிக் கிடந்த சென்னை உர நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிதி ஒதுக்கியதால், மீண்டும் உற்பத்தியை அதிகரித்து லாபம் ஈட்டியுள்ளது.சென்னை உர நிறுவனம் (மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ்) 1972 முதல் இயங்கி வருகிறது. விவசாயத்திற்கு தேவையான யூரியா, அடியுரமான காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உட்பட பல்வேறு உரங்களைத் தயாரித்து வந்தது. தமிழகத்தின் உரத் தேவையில் 80 சதவீதம் அளவு, இந்நிறுவனம் மூலம் கிடைத்து வந்தது. இந்நிறுவனம் 2006 ஆண்டு முதல் நஷ்டத்தில் இயங்கி வந்தது. நிர்வாக சீர்கேடு உட்பட பல்வேறு காரணங்களால் தவித்த இந்நிறுவனம், யூரியாவை மட்டும் ஓரளவு உற்பத்தி செய்தது.

மற்ற உரங்களின் உற்பத்தி நின்று போனது.இதனால், தமிழகத்திற்கு தேவையான காம்ப்ளக்ஸ் அடியுரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோ பெறும் நிலை ஏற்பட்டது. இதற்கு செலவும் அதிகமானது.இந்நிலையில், மத்திய ரசாயனத் துறை அமைச்சராக மு.க.அழகிரி பொறுப்பேற்றதும், உரத் தட்டுப்பாடு இருப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நலிவடைந்து வரும் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தைச் சரி செய்தால், மீண்டும் முழு உத்வேகத்துடன் செயல்படத் துவங்கும் எனக் கூறப்பட்டது. இந்நிறுவனம் முழுமையாக இயங்க மு.க.அழகிரி, 166 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது யூரியா உரம் உற்பத்தி அதிகரித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் இந்நிறுவனம் 12.5 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளது.இதுகுறித்து நிர்வாக இயக்குனர் எஸ்.முரளிதரன் கூறுகையில், "விவசாயிகளுக்கு சாகுபடிக்கு அடியுரமாக தேவைப்படும் காம்ப்ளக்ஸ் உரம், விஜய் 17:17:17 மற்றும் 20:20, 14:28:14 உட்பட அனைத்து ரக உரங்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மத்திய அமைச்சரின் முயற்சியால், வரும் டிசம்பரில் அவற்றை உற்பத்தி செய்ய நிறுவனம் தயாராக உள்ளது' என்றார்.

Thursday, November 26, 2009

நலதிட்ட உதவிகள் வழங்க துணை முதல்வர் குமரி மாவட்டம் வருகை



தமிழக துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார்.

தேங்காய் பட்டணம் மீன் பிடி துறைமுகம், புத்தேரி ரெயில்வே மேம்பாலம், அரசு பொறியியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டுகிறார்.

அதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் நிதி வழங்கியும், ஆயுர் வேத கல்லூரியை தொடங்கி வைத்தும் பேசுகி றார். இதற்கான விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

தற்போது அங்கு பிரமாண்ட பந்தலும், மேடை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இன்று நீர் விழாமல் இருக்கும் வகையில் ஆஸ்பட்டாஸ் கூறை அமைக்கும் பணி நடக்கிறது.

இதற்கிடையே கூட்டம் நடக்கும் மைதானம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாது காப்பு பணிக்கென வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 800 போலீஸ் 4 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

துணை முதல்-அமைச் சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு குமரி மாவட்டத்துக்கு இப்போது தான் முதல் முறையாக வருகிறார். எனவே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சுரேஷ் ராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

எனவே வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் மாவட்ட தி.மு.க.வினர் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Wednesday, November 25, 2009

சிங்கப்பூரில் துணை முதல்வர் ஸ்டாலின்


சிங்கப்பூர் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையத்துக்குச் சென்ற துணை முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள உயரதிகாரிகளுடன் நிதி நகரின் சர்வதேச செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.

துணை முதல்வர் ஸ்டாலின், கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரில், "வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், பங்குச்சந்தை வர்த்தகர்கள் ஆகியோரை தமிழகத்துக்கு ஈர்க்கும் வகையில், சென்னை அருகே நிதி நகரம் ஒன்று தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தும்' என அறிவித்தார்.இந்த நிதி நகரத் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தை, ஒருங்கிணைப்பு முகமையாக அரசு நியமித்துள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பாரூகி, ராமசுந்தரம், தீனபந்து, பனீந்திர ரெட்டி, காந்திமதிநாதன் ஆகிய உயரதிகாரிகளும், சென்னை மேயர் சுப்ரமணியனும் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.அங்குள்ள நிதி நகரம், அங்கு அமைக்கப்பட்டு வரும் விமான ஊர்தி சேவைப் பூங்கா, சிங்கப்பூர் நதி மற்றும் கெல்லாங் நதி ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் எந்தெந்த வகையில் அப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன, அந்த அனுபவத்தின் அடிப்படையில் சென்னையில் நிதி நகரம், கூவம் நதி சீரமைப்புப் பணிகள் மற்றும் தமிழகத்தில் வானூர்தி சேவைப் பூங்கா போன்றவற்றை எப்படி செயல்படுத்துவது என்பதும் முடிவு செய்யப்படும். சிங்கப்பூர் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையத்துக்கு நேற்று சென்ற துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், அங்கு பணிபுரியும் நிதி மற்றும் பங்குச்சந்தை உயரதிகாரிகளுடன், நிதி நகரத்தின் சர்வதேச செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். மேலும், மெரீனா வளைகுடா பகுதிகளையும் பார்வையிட்டனர்.

(நன்றி தினமலர்)


Tuesday, November 24, 2009

தி மு க வேட்பாளர்கள் அறிவிப்பு



தி மு க சார்பில் திருசெந்தூர் மற்றும் வந்தவாசியில் நடைபெற இருக்கும் இடை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இன்று வெளியிட்டார்கள்.


திரு அனிதா ராதாகிருஷ்ணன்

அதன்படி திருசெந்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் திரு அனிதா ராதா கிருஷ்ணனும் வந்தவாசி தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலம் சென்ற திரு ஜெயராமன் அவர்களின் புதல்வன் கமலகண்ணன் அவர்களும் போட்டியிடுவார்கள் என்று முதல்வர்அறிவித்தார்கள்.

நான் கண்ணீர் சிந்த உரிமையில்லையா? முதல்வர் கலைஞர் உருக்கம்


முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- நீங்கள் 18-11-2009 அன்று "நம் மவுன வலி; யாருக்கு தெரியப் போகிறது?'' என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே?Justify Full

பதில்:- ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன- அதே நேரத்தில் இளந்தலைவர் ராஜீவ்காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்தினமும், பத்மநாபாவும், யோதீஸ்வரனும் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கிய போது - அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதிய பத்திரிகைகளில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,

``எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்! இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை! கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி! உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் - உயிரனையான் - உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?''

மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தவர்தான் அவர். அப்படியெல்லாம் அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என்மீது பாய்கிறார்களே; தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதைவிடக் காரணங்கள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள்!

கேள்வி:- விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றி நேரடியாக எந்த விதமான தனிப்பட்ட குற்றச்சாட்டினையும் கூறாமல், அந்த இயக்கத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையெல்லாம் சுட்டிக்காட்டி, தெளிவில்லாமல் அவசரப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அல்லவா இத்தனை பாதிப்புகள் என்று வேதனையோடு எழுதியிருந்தீர்கள். அந்த கடிதத்தை அனைவரும் பாராட்டி எழுதியிருந்தார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலர் மட்டும், குறிப்பாக எதிர்க்கட்சி தலைவி ஜெயலலிதா உள்பட தாங்கள் பிரபாகரனை கடுமையாகத் தாக்கி எழுதி விட்டதைப்போல அறிக்கை விடுத்துள்ளனரே?

பதில்:- பிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல, கடிதம் அல்ல, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 16-4-2002 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் வருமாறு:-

* ``இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது.

* விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.

* ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக்கொண்டு வரவேண்டும்.'

இப்படியொரு தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றியவர்தான் தற்போது நான் நல்லதையெண்ணி நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். பிரபாகரனை; என்றைக்கும் ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்கு துணை போய் நம்மைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள்.

கேள்வி:- துரோகிகளுக்குப் பாராட்டுப் பத்திரம் நீங்கள் வழங்குவதாக ஒருவர் அறிக்கை விட்டிருக்கிறாரே?

பதில்:- உண்மைதான் -துரோகிகள் யார் என்று தெரியாமல் அவர்களுக்கு சில காலம் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருந்து விட்டேன்!

கேள்வி:- தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடுத்த முடிவிற்கிணங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?

பதில்:- இத்திங்கள் 2-ந் தேதியன்று தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் முகாம்களை மேம்படுத்துவது குறித்து ஒரு ஆய்வு கூட்டம் என்னுடைய தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும், மற்ற அமைச்சர் களையும் தமிழகத்திலே உள்ள 115 முகாம்களையும் ஆய்வு செய்து 10-11-2009-ந் தேதிக்குள் எனக்கு அறிக்கை தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவ்வாறே அமைச்சர்கள் அனைவரும் அந்த முகாம்களைப் பார்வையிட்டு எனக்கு அறிக்கையினை அளித்தார்கள்.

அந்த அறிக்கைகள் அமைச்சரவையிலே 12-11-2009 அன்று விவாதிக்கப்பட்டு -இறுதியாக ரூ.100 கோடி அதற்காக நிதி ஒதுக்கீடு அரசின் சார்பிலே செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதற்கும் முதற்கட்டமாக ரூ.45 கோடி ஒப்பளிப்பு அளிக்கப்பட்டு 20-11-2009 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிதியிலிருந்து என்னென்ன பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். பழுது நீக்கம் செய்தல், புதுப்பிக்க வேண்டிய வீடுகளுக்காக ரூ.15 கோடியே 22 லட்சமும் - புதிய ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கைப்பம்புகள் அமைத்தல், பழுது நீக்கம் செய்ய வேண்டிய ஆழ்குழாய் கிணறுகள், பழுது நீக்கம் செய்ய வேண்டிய கைப்பம்புகள், புதிய மேல்நிலைத் தொட்டிகள், பழுது நீக்கம் செய்ய வேண்டிய மேல்நிலைத் தொட்டிகள், புதிய குழாய்கள் பதித்தல் மற்றும் விரிவுபடுத்தல் ஆகியவற்றுக்காக ரூ.4 கோடியே 15 லட்சமும் -புதிய கழிவறைகள் கட்டுதல், பழுது நீக்கம் செய்ய வேண்டிய கழிவறைகள், புதிய கழிவு நீர் கால்வாய்கள் அமைத்தல், பழுது நீக்கம் செய்ய வேண்டிய கழிவு நீர் கால்வாய்கள் ஆகியவற்றுக்காக ரூ.7 கோடியே 67 லட்சமும்- முகாம்களில் உள்ள சாலைகளை பழுது நீக்கம் செய்ய ரூ.72 லட்சமும் - மின் கம்பங்கள் மற்றும் தெரு விளக்குகளுக்காக ரூ.2 கோடியே 82 லட்சமும் - வீடுகளில் உள்ள மின் கம்பிகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் மின் உபகரணங்களை மாற்றுதல் ஆகியவற்றுக்காக ரூ.6 கோடியே 76 லட்சமும் என மொத்தம் ரூ.37 கோடியே 33 லட்சத்துக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.

இதுதவிர நலத் திட்டங்களான- உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல், இலவச கலர் டி.வி.களை வழங்குதல், திருமண நிதி உதவி வழங்குதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், ஊனமுற்றோர்க்கு உபகரணங்கள் வழங்குதல், ஈமக்கிரியைக்கான தொகையை உயர்த்துதல், மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்குதல் போன்றவைகளை சம்பந்தப்பட்ட துறைகள் பொறுப்பேற்று உடனடியாக நிறைவேற்றிடவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற முடிவுகள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுவிட்டன. ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.100 கோடியில், இதற்கான செலவுகள் போக எஞ்சியுள்ள தொகையில் தக்கதொரு கட்டிட வடிவமைப்பை ஏற்படுத்தி, தகுதியான நிலத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் புதிய கான்கிரீட் வீடுகள் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கட்டுவதற்கு தனியாக நடவடிக்கை எடுக்கப்படவும் உள்ளது.

கேள்வி:- தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் தொடர்ச்சியாக ஒரு கட்சியினர் ஏதாவது ஒரு சிறு காரணத்தைச் சொல்லியாவது - அங்கே சாலையில்லை, குடிநீர் இல்லை என்று கூறிக்கொண்டு அன்றாடம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதைப் பற்றி?

பதில்:- உண்மையிலேயே அத்தகைய குறைபாடுகள் எங்கிருந்தாலும் அதை எந்த ஒரு எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதைச் சீர்படுத்துவது இந்த அரசின் கடமை. அந்த கடமையை தவறாமல் செய்து வருகிறோம் என்பதை எதிர்க்கட்சியினர் உள்பட அனைவரும் நன்கறிவார்கள்.

கேள்வி:- அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வைத் தடுக்க தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து?

பதில்:- விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய நடுத்தர மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன், தமிழக அரசு 14-4-2007 முதல் சிறப்பு விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு சமையல் எண்ணை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பொருள்கள் சலுகை விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பாமாயில் 6,021 கிலோ லிட்டரும், துவரம் பருப்பு 5,313 மெட்ரிக் டன்னும், உளுத்தம் பருப்பு 2,199 மெட்ரிக் டன்னும் விநியோகிக்கப்பட்டது. இந்தப் பொருள்களின் சந்தை விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதைக் கண்டு; தமிழ்நாடு அரசு இந்த பொருள்களை அதிக அளவில் கொள்முதல் செய்து, பொது மக்களுக்கு சலுகை விலையில் வழங்கி வருகிறது.

அக்டோபர் மாதத்தில் பாமாயில் 12,362 கிலோ லிட்டரும், துவரம் பருப்பு 12,590 மெட்ரிக் டன்னும், உளுத்தம் பருப்பு 56,98 மெட்ரிக் டன்னும் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இந்த பொருள்கள் வழங்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அளவிற்கு அக்டோபர் மாதத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள புள்ளி விவரத்தைக் காணும்போது இத்திட்டத்தினை பொதுமக்கள் எந்த அளவிற்கு பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். தற்போது சமையல் எண்ணையின் (கடலை எண்ணையின்) சராசரி சந்தை சில்லறை விலை- லிட்டர் ஒன்றுக்கு ரூ.70 என்றுள்ள நிலையில்- சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30-க்கு வழங்கப்படுகிறது.

அதேபோல, துவரம் பருப்பு சராசரி சந்தை சில்லறை விலை கிலோ ரூ.78 என்றுள்ள நிலையில், சிறப்பு பொது விநியோக திட்டத்தில்- இதே பொருள் கிலோ ஒன்று ரூ.40-க்கு வழங்கப்படுகிறது.

உளுத்தம் பருப்பின் விலை சந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூ.67 என்கிற நிலையில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் கிலோ ஒன்று ரூ.40-க்கு வழங்கப்படுகிறது. எனவே, ஜனவரி மாதத்துடன் அக்டோபர் மாதத்தை ஒப்பிட்டால்- பாமாயில் விநியோகம் 105 சதவிகிதமும்- துவரம் பருப்பு விநியோகம் 137 சதவிகிதமும்- உளுத்தம்பருப்பு விநியோகம் 159 சதவிகிதமும் தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியினால் அதிக அளவிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதை அறியலாம். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான விலை வாசியைக் குறைக்க தமிழக அரசு எடுத்த முக்கிய முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதை இந்த விவரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Monday, November 23, 2009

நாகர்கோவிலில் 2-ந் தேதி விழா ரூ.150 கோடி நல உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்


குமரி மாவட்டத்தில் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந் தேதி சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கவும் செய்கிறார். அதோடு புதிய சமுத்துவபுரத்தையும் திறந்து வைக்கிறார்.

இதற்கான விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. அங்கு மேடை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அமைச்சர் சுரேஷ்ராஜன் இன்று அதிகாரிகளுடன் சென்று மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

துணை முதல்- அமைச்ச ராக மு.க.ஸ்டாலின் பதவி யேற்ற பின்பு இப்போதுதான் முதல் முறையாக குமரிமாவட்டம் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். துணை முதல்- அமைச்சர் பங்கேற்கும் விழா எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

இப்பந்தலில் 6 ஆயிரம் பேர் அமரலாம். பந்தலுக்கு வெளியே 20 ஆயிரம் பேர் நிகழ்ச்சியை நின்று பார்க்கலாம். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக புத்தேரி ரெயில்வே மேம்பாலம், மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்டம், நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம், கேந்திர வித்யாலயா பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதுதவிர லெட்சுமி புரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். மேலும் மகளிர் சுயஉதவிக்குழுகளுக்கு சுழல்நிதியையும் வழங்குகிறார். ஆக ரூ.150 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இவ்வாறு அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார். அவருடன் கலெக்டர் ராஜேந்திரரத்னூ, போலீஸ் சூப்பிரண்டு சண்முகவேல், முதன்மை கல்வி அதிகாரி பொன்னையா, ஆர்.டி.ஓ. நடராஜ், தாசில்தார் ராமச்சந்திரன், மற்றும் தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் மகேஷ், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி ஆகியோர் உடன் சென்றனர்.


(நன்றி: மாலைமலர்)

Sunday, November 22, 2009

மு.க.ஸ்டாலின், 2-ந்தேதி நாகர்கோவில் வருகிறார்

மு.க.ஸ்டாலின், 2-ந்தேதி நாகர்கோவில் வருகிறார்

தமிழக துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சிதிட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியும் வழங்கி வருகிறார். இதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ராமவர்மபுரம் சமத்துவபுரம் திறப்பு விழா, தேங்காய்பட்டணம் துறைமுகம் கட்டுமான பணி, புத்தேரி ரெயில்வே மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி நாகர்கோவில் வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் அவர் மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்கான விழா நடத்த நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஏதாவது ஒரு இடத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடைபெறும் என தெரிகிறது.

மு.க.ஸ்டாலின் வருகை குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை : அமைச்சர் சுரேஷ்ராஜன் பங்கேற்பு


நாகர்கோவில் நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் இன்று (22-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
நாகர்கோவில் நகர அவைத்தலைவர் பூதலிங்கம் தலைமை தாங்குகிறார். நகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் குமரிக்கு வருகை தரும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அமைச்சர் சுரேஷ்ராஜன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார்.
இதில் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஷா, முன்னாள் எம்.பி.சங்கரலிங்கம், மாநில மீனவரணி செயலாளர் பெர்னார்டு, ஹெலன் டேவிட்சன் எம்.பி., ராஜன் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.