Monday, November 23, 2009

நாகர்கோவிலில் 2-ந் தேதி விழா ரூ.150 கோடி நல உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்


குமரி மாவட்டத்தில் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந் தேதி சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கவும் செய்கிறார். அதோடு புதிய சமுத்துவபுரத்தையும் திறந்து வைக்கிறார்.

இதற்கான விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. அங்கு மேடை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அமைச்சர் சுரேஷ்ராஜன் இன்று அதிகாரிகளுடன் சென்று மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

துணை முதல்- அமைச்ச ராக மு.க.ஸ்டாலின் பதவி யேற்ற பின்பு இப்போதுதான் முதல் முறையாக குமரிமாவட்டம் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். துணை முதல்- அமைச்சர் பங்கேற்கும் விழா எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

இப்பந்தலில் 6 ஆயிரம் பேர் அமரலாம். பந்தலுக்கு வெளியே 20 ஆயிரம் பேர் நிகழ்ச்சியை நின்று பார்க்கலாம். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக புத்தேரி ரெயில்வே மேம்பாலம், மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்டம், நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம், கேந்திர வித்யாலயா பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதுதவிர லெட்சுமி புரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். மேலும் மகளிர் சுயஉதவிக்குழுகளுக்கு சுழல்நிதியையும் வழங்குகிறார். ஆக ரூ.150 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இவ்வாறு அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார். அவருடன் கலெக்டர் ராஜேந்திரரத்னூ, போலீஸ் சூப்பிரண்டு சண்முகவேல், முதன்மை கல்வி அதிகாரி பொன்னையா, ஆர்.டி.ஓ. நடராஜ், தாசில்தார் ராமச்சந்திரன், மற்றும் தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் மகேஷ், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி ஆகியோர் உடன் சென்றனர்.


(நன்றி: மாலைமலர்)

No comments:

Post a Comment