Wednesday, November 25, 2009

சிங்கப்பூரில் துணை முதல்வர் ஸ்டாலின்


சிங்கப்பூர் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையத்துக்குச் சென்ற துணை முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள உயரதிகாரிகளுடன் நிதி நகரின் சர்வதேச செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.

துணை முதல்வர் ஸ்டாலின், கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரில், "வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், பங்குச்சந்தை வர்த்தகர்கள் ஆகியோரை தமிழகத்துக்கு ஈர்க்கும் வகையில், சென்னை அருகே நிதி நகரம் ஒன்று தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தும்' என அறிவித்தார்.இந்த நிதி நகரத் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தை, ஒருங்கிணைப்பு முகமையாக அரசு நியமித்துள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பாரூகி, ராமசுந்தரம், தீனபந்து, பனீந்திர ரெட்டி, காந்திமதிநாதன் ஆகிய உயரதிகாரிகளும், சென்னை மேயர் சுப்ரமணியனும் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.அங்குள்ள நிதி நகரம், அங்கு அமைக்கப்பட்டு வரும் விமான ஊர்தி சேவைப் பூங்கா, சிங்கப்பூர் நதி மற்றும் கெல்லாங் நதி ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் எந்தெந்த வகையில் அப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன, அந்த அனுபவத்தின் அடிப்படையில் சென்னையில் நிதி நகரம், கூவம் நதி சீரமைப்புப் பணிகள் மற்றும் தமிழகத்தில் வானூர்தி சேவைப் பூங்கா போன்றவற்றை எப்படி செயல்படுத்துவது என்பதும் முடிவு செய்யப்படும். சிங்கப்பூர் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையத்துக்கு நேற்று சென்ற துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், அங்கு பணிபுரியும் நிதி மற்றும் பங்குச்சந்தை உயரதிகாரிகளுடன், நிதி நகரத்தின் சர்வதேச செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். மேலும், மெரீனா வளைகுடா பகுதிகளையும் பார்வையிட்டனர்.

(நன்றி தினமலர்)


No comments:

Post a Comment