Sunday, November 22, 2009

மு.க.ஸ்டாலின், 2-ந்தேதி நாகர்கோவில் வருகிறார்

மு.க.ஸ்டாலின், 2-ந்தேதி நாகர்கோவில் வருகிறார்

தமிழக துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சிதிட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியும் வழங்கி வருகிறார். இதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ராமவர்மபுரம் சமத்துவபுரம் திறப்பு விழா, தேங்காய்பட்டணம் துறைமுகம் கட்டுமான பணி, புத்தேரி ரெயில்வே மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி நாகர்கோவில் வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் அவர் மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்கான விழா நடத்த நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஏதாவது ஒரு இடத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடைபெறும் என தெரிகிறது.

மு.க.ஸ்டாலின் வருகை குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை : அமைச்சர் சுரேஷ்ராஜன் பங்கேற்பு


நாகர்கோவில் நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் இன்று (22-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
நாகர்கோவில் நகர அவைத்தலைவர் பூதலிங்கம் தலைமை தாங்குகிறார். நகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் குமரிக்கு வருகை தரும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அமைச்சர் சுரேஷ்ராஜன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார்.
இதில் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஷா, முன்னாள் எம்.பி.சங்கரலிங்கம், மாநில மீனவரணி செயலாளர் பெர்னார்டு, ஹெலன் டேவிட்சன் எம்.பி., ராஜன் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment