Wednesday, January 20, 2010

விரைவில் அ.தி.மு.க. தொண்டர்கள் இல்லாத கூடாரமாகும்


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் குழந்தைவேலு இன்று தி.மு.க.வில் இணைந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். 1972-ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அ.தி.மு.க.வில் என்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினேன். 1977 ஆம் ஆண்டு திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக என்னை நிறுத்தி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்.

அவர் மீது அன்பும் பாசமும் வைத்துள்ள லட்சோப லட்சம் தொண்டர்களும், எங்களைப் போன்ற சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் கூட பார்க்க அனுமதி மறுக்கும் ஜெயலலிதா தலைமை ஏற்று இனியும் கட்சியில் தொடர விருப்பமில்லாத லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், தலைவர் கருணாநிதி தலைமையை ஏற்று தி.மு.க.வில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள்.

அண்ணாவுக்கு பின் கழகத்தை தலைமை ஏற்று நடத்த பொறுத்தமானவர், தொண்டர்களை அரவணைத்து செல்பவர் என எம்.ஜி.ஆரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் கருணாநிதி.

அவர் 5-ம் முறையாக தமிழகத்தின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு ஏழைகள் ஏற்றம் பெற அடுக்கடுக்கான சாதனைகளாக 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டி.வி. மற்றும் எரிவாயு அடுப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப் பட்டோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்துடன், 108 உயிர் காக்கும் அவசர சிகிச்சை வாகனம், குடிசை வீடே இல்லாத தமிழகத்தை உருவாக்கிட 21 லட்சம் காங்கிரீட் வீடுகள் இலவசமாக கட்டித் தரும் திட்டத்தை தீட்டி சாமானியவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகிறார்.

தலைவர் கருணாநிதியை தலைவராக ஏற்று நான் இன்று தி.மு.க.வில் இணைக்கிறேன். அ.தி.மு.க. தொண்டர்கள் இல்லாத கூடாரமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தலைவர் கருணாநிதி தலைமையில் இணைந்து தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் பாடுபடுவேன். உண்மையான அ.தி.மு.க. அடிமட்டத் தொண்டர்களும், வாக்காளர்களும் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்து அண்ணாவின் தம்பி தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் தலைவர் கருணாநிதி தலைமையேற்று தமிழர்கள் நலன் காக்க பாடுபட வாருங்கள் என்று அழைத்து தாய் கழகமான தி.மு.க.வில் என்னை இன்று முதல் இணைத்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment