Friday, January 29, 2010

மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேலு, மத்திய மந்திரி மு.க.அழகிரி குறித்து `அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு பட்டாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

"நாளைய தினம் (இன்று ஜன.30) பிறந்த தினம் கொண்டாடும் தி.மு.கழகத்தின் தென் மண்டல அமைப்பாளரும், மத்திய மந்திரியும், என்னுடைய அன்பு அண்ணனுமான மு.க.அழகிரி பற்றி ரத்தினவேல் எழுதிய அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் உங்களோடு கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். உங்களோடு வாழ்த்திப் பேசி பிறந்த நாள் வாழ்த்தை முன்கூட்டியே கூறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த ஆண்டு அண்ணன் மு.க.அழகிரியின் பிறந்த தின விழா ஒரு பொதுக்கூட்டமாக அல்லாமல் மாநாடு போன்று நடைபெற்றது. அந்த விழாவில் நான் ஒன்றை குறிப்பிட்டுக் கூறினேன். "நானும் அண்ணன் மு.க.அழகிரியும் தி.மு.கழகத்திற்கும், கலைஞருக்கும் இரட்டைக்குழல் துப்பாக்கியை போல் இருப்போம்'' என்ற கருத்தை சொன்னேன். அதே கருத்தை உறுதியாக இப்போதும் சொல்கிறேன். அண்ணன் அழகிரி இன்னும் பல சிறப்புகளைப் பெற்று தி.மு.கழகத்திற்கும், சமுதாயத்திற்கும் குறிப்பாக கலைஞருக்கும் வலு சேர்க்கின்ற வகையில் பணியாற்ற வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இந்த விழாவில் பங்கேற்று உடனடியாக விமானத்தில் சென்னை செல்ல இருக்கிறேன். மு.க.அழகிரி அவர்களை வாழ்த்த வயதில்லை என்றாலும், அவரைவிட வயதில் குறைந்த அவருடைய தம்பியாக இருந்தாலும், தி.மு.கழகத்தின் சார்பாகவும், இளைஞர் அணி சார்பாகவும் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்தி இங்கிருந்து விடை பெற்றுச் செல்கிறேன்.''

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசி முடித்தவுடன், அவரும் மத்திய மந்திரி மு.க.அழகிரியும் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அவர்களுடைய தாயார் தயாளுஅம்மாளிடம் சென்று பேசினார்கள். பின்னர் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

தொடர்ந்து விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கவிஞர் கனிமொழி எம்.பி., குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் ஆகியோர் பேசினார்கள். முடிவில் பி.மூர்த்தி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

விழாவில் மு.க.அழகிரியின் தாயார் தயாளு அம்மாள், மனைவி காந்தி அழகிரி, மகன் துரை, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மைதீன்கான், தமிழரசி, டாக்டர் பூங்கோதை, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், மத்திய மந்திரி நெப்போலியன் ஆகியோரும் வந்திருந்து மு.க.அழகிரிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

முன்னதாக திருச்சியை அடுத்த குண்டூரில் உள்ள எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா தொடக்க விழாவில் தமிழக துணை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு கல்விக்காக பல சலுகைகளை வழங்கி வருகிறது. 2007-08-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள்.

சிறுபான்மையினர் வளர்ச்சியில் இந்த அரசு எப்போதுமே மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. சிறுபான்மையினருக்கு என்று தனியாக வழங்கப்பட்ட 31/2 சதவீத உள் ஒதுக்கீட்டினால் 2008-2009-ம் கல்வியாண்டில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த 52 மாணவர்கள் மருத்துவ கல்லூரியிலும், 4,885 பேர் பொறியியல் கல்லூரிகளிலும் இடம் கிடைத்து படித்து வருகிறார்கள். உள் இடஒதுக்கீட்டின் மூலம் 747 இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு பணிகளில் வேலை வழங்கப்பட்டு உள்ளது. சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்களுக்காக கோவை, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 5 இடங்களில் விடுதிகளும் கட்டப்பட்டு உள்ளன. இப்படி சிறுபான்மையினர்களுக்காக இந்த அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வருங்காலத்தை நிர்ணயிக்க கூடியவர்களாக மாணவர்கள் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு துணை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.



No comments:

Post a Comment