Sunday, January 10, 2010

தேமுதிகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சிற்கே இடமில்லை

தேமுதிகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சிற்கே இடமில்லை என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க நினைப்பவர்கள் நிச்சயம் தோற்பார்கள் எனவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி 2011ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலிலும் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் காங்கிரசை பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்து 3-வது பெரிய கட்சியாக உள்ளது. 20 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை தொடர்ந்து பலப்படுத்துவதில் நான் பாடுபட்டு வருவதை சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் அறிவார்கள்.

சமீபத்தில் வெளியான ஒரு வாரப்பத்திரிகையில் தி.மு.க.-காங்கிரஸ் உறவை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மத்திய மந்திரி ப.சிதம்பரம் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவது போல் குறிப் பிட்டுள்ளார்கள்.

சிதம்பரம் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட வில்லை. அவர் மிகச்சிறந்த மத்திய மந்திரியாக செயல்பட்டு வருகிறார். மத்திய மந்திரி வாசனும் சிறந்த முறையில் மந்திரிசபையில் செயல்பட்டு வருகிறார்கள்.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் நிறைவேற்றி வரும் சாதனைகளை சொல்லி கடந்த 10 இடைத்தேர்தல்களில் வெற்றி வாகை சூடியுள்ளோம். இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணி.

இந்த கூட்டணியை உடைப்பதற்கு சதி செய்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் கனவு பலிக்காது. சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் தலைமையை ஏற்று காங்கிரஸ் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

தமிழகத்திலும் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் தான் இந்த சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி தான். தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.

வேறு கட்சிகள் எங்களுடன் இணைய விரும்பினாலும் அதுபற்றி சோனியாகாந்தியும், எங்கள் கூட்டணி தலைவர் கருணாநிதியும் பேசி முடிவு செய்வார்கள். காங்கிரஸ் தலைமையை ஆதரிப்பவர் களை நாங்கள் வரவேற்போம்.

பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். இந்த இடைத்தேர்தல் மட்டு மல்ல. வரும் 2011 தேர்தலிலும் எங்கள் கூட்டணி அமோக வெற்றிபெறும்.

இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.

No comments:

Post a Comment