Wednesday, January 27, 2010

முதல்வர் கலைஞரின் சாரதியான டி ஆர் பாலு


முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் தம்பி சக்திவேல் மகன் முத்துக்குமரன்-வித்யா திருமணம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்தது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மணமக்களை வாழ்த்தி பேசிய கவிஞர் வைரமுத்து திருமணம் நடத்தி வைத்த தலைவரை மறந்து விடக்கூடாது. அடுத்த ஆண்டு அல்லது 5 ஆண்டுக்கு ஒருமுறையாவது திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது பற்றி தலைவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று கூறினார். அவருக்கு கவலை இல்லை. ஆனால் எல்லோரும் கடிதம் எழுதினால் எனக்கு அது எவ்வளவு பெரிய பாரம் என்பது அவருக்கு தெரியாது.

1971-ல் நான் திருமணம் நடத்தி வைத்தவர் இப்போது எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்றும் இன்னொருவர் பேரனுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதுகிறார்கள்.

இது போன்ற கடிதங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே மணமக்கள் திருமணத்திற்கு பிறகு அவரவர் வேலை பார்த்துக் கொண்டு அவர்கள் பரம்பரையை கவனித்து கொண்டு இருப்பதுதான் நல்லது. இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் கோபு பேசும் போது, அரசியலில் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து திருமண விழாக்களில் பண்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த பண்பாட்டை உறவினர் திருமணத்தில் மட்டும் அல்ல. கருணாநிதி வீட்டு திருமணத்திலும் கடைபிடிக்க வேண்டும். பண்பாடு என்பது பொதுவானது. அது ஒரு வழிப்பாதை அல்ல. அதை அனைவரும் ஏற்றுக்கொண்டு அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க வேண்டும். இதை அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தோழர்களுக்கும் இந்த அறிவுரையை வழங்குவார் என்று நம்புகிறேன்.

டி.ஆர்.பாலு கோபக்காரர் என்று கூறினார்கள். ஆனால் அவரது கோபம் உடனே தணிந்து விடும். ஒருமுறை அவர் தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டார். நான் வேறு ஒரு தொகுதியில் நிற்கும்படி கூறினேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு அதே தொகுதியில் அவர் நிற்கலாம் என்று கூறி அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கும் கோபப்பட்டார். ஏன் இவ்வளவு தாமதமாக தந்தீர்கள் என்று கோபப்பட்டார்.

அவர் குணத்தை அறிந்துதான் அவருக்கு பாலு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பால் கொதிக்கும் தண்ணீர் விட்டால் தணிந்து விடும். அடிக்கடி அவர் கோபப்பட்டாலும், அவருக்கு எப்படி தண்ணீர் தெளித்து அடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

நான் சொன்னது அனைத்தையும் கேட்கும் அருமை தம்பி பாலு எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட காலத்தில் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் கழக தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆட்சியும் கலைக்கப்பட்டது.

இதனால் எனக்கு கார் ஓட்டிய சில டிரைவர்கள் வேலையை விட்டு போய் விட்டார்கள். ஒருமுறை அன்பகத்தில் இருந்து காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது அண்ணா அறிவாலயம் கட்டப்படவில்லை. அந்த இடத்திற்கு கார் வந்தபோது டிரைவர் திடீரென்று இறங்கினார். நான் வேலை விட்டு போகிறேன் என்று கூறினார். வீடு வரை வாருங்கள் என்று சொன்ன போதும் அவர் அதை கேட்கவில்லை. பாதியில் என்னை விட்டுவிட்டு போய் விட்டார்.

நான் ஆட்டோ பிடித்து இரவு 12 மணிக்கு வீடு போய் சேர்ந்தேன். அதன் பிறகு வெளியூர் சென்றால் எனது காரை கண்ணப்பனும், உள்ளூரில் டி.ஆர்.பாலுவும் ஓட்டினார்கள். அப்போது பாலு மிரட்டப்பட்டார். கைது செய்யப்பட்டார். என்றாலும் எதற்கும் துணிந்த, எனக்காக எதையும் செய்யும் தம்பியாக அவர் இருக்கிறார்.

இந்த இயக்கம் இத்தனை ஆண்டுகள் எத்தனையோ சோதனைகளை தாண்டி தாக்கு பிடித்திருக்கிறது என்றால், இந்த இயக்கம் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் எதற்கும் துணிந்த டி.ஆர்.பாலு போன்ற தொண்டர்கள் இதில் இருப்பதால்தான். திராவிட இயக்கம் ஜனநாயகத்தை காக்கவும், இந்தியாவை வாழவைக்கவும் தோழமை கட்சிகளுடன் உழைத்து வருகிறது.

இந்த நாட்டில் மத நல்லிணக்கத்தை வேரூன்ற செய்யவும், மதவாதத்தை கிள்ளி எறியவும், ஏழை- எளியவர்கள் வளம் பெறவும் நாம் பெரிய சக்திகளை எதிர்த்து போராட முடிகிறது என்றால், அதற்கு காரணம் பாலு போன்ற தொண்டர்கள் இருப்பதால்தான். அவரது இல்ல திருமணத்தில் இல்லை எனது இல்ல திருமணத்தில் மணமக்கள் எல்லா நலமும் பெற வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment