Monday, January 11, 2010

பொய்யே உன் பெயர்தான் ஜெயலலிதாவோ?

சட்டசபையில் தொடரின் கடைசி கூட்டம் இன்று நடந்தது. அப்போது கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.இதில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது:-

கவர்னர் உரையில் மக்களுக்கு பயன்தரும் திட்டம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு கூறப்பட்ட திட்டங்களே இந்த ஆண்டும் உள்ளது. இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு முதல்வரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில் அப்படி கிடையாது.

எங்கள் ஆட்சியிலும் உழவர் பாதுகாப்பு திட்டம் அறிமுகம் செய்தோம். அதற்கு முதல்- அமைச்சரின் திட்டம் என்றுதான் வைக்கப்பட்டதே தவிர என் பெயர் சூட்டப்படவில்லை.

மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காகத்தான் திட்டங்கள் கொண்டு வருகிறோம். இதில் முதல்வரின் பெயரை சூட்டுவது சரியா?

அமைச்சர் பொன்முடி:- உங்கள் ஆட்சிக்காலத்தில் சந்தியா போக்குவரத்துக் கழகம், ஜெ.ஜெ. டிரான்ஸ் போர்ட், ஜெ.ஜெ. நெல் என்று பெயர் சூட்டப்பட்டது. தயவு செய்து நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். எம்.ஜி.ஆர். திரைப்பட நகருக்கு கூட ஜெயலலிதா நகரம் என்று சூட்டப்பட்டதே?

எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் பெயர் வைக்கப்பட்டுள்ளதே? அதையும் வேண்டாம் என்று சொல்கிறீர்களா? (அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்தினார்)

ஜெயலலிதா:- அமைச்சர் பொன்முடி முற்றிலும் தவறான தகவல்களை தருகிறார். நான் முதல்வராக இருந்தபோது.... (அமைச்சர் ஐ.பெரியசாமி பேச எழுந்தார். உடனே அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

ஐ.பெரியசாமி:- உழவர் பாதுகாப்புத் திட்டம் கொண்டு வந்ததும் கலைஞர்தான்.
பொன்முடி:- எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்தவர். தவறான தகவலை இந்த அவையில் சொல்லக்கூடாது. தவறு இருந்தால் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அவரது ஆட்சியில் அவரது பெயரை சூட்டவில்லை என்கிறாரே? அதற்கு பொறுப்பு ஏற்று நிரூபித்தால் அரசியலை விட்டு வெளியேற தயாரா?

(அ.தி.மு.க.வினர் கடுமையாக எதிர்த்து கூச்சலிட்டனர். பதிலுக்கு தி.மு.க.வினரும் எழுந்து கோஷமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார்).

ஜெயலலிதா:- அமைச்சர் பொன்முடி மீண்டும் தவறான தகவலை சொல்கிறார். 1991-ம் ஆண்டு நான் முதன் முதலாக பொறுப்பேற்றதும் எம்.ஜி. ஆர். கொண்டு வந்த சத்துணவுக்கு அவரது பெயரை சூட்டினேன். நான் ஆட்சிக்கு வந்தபோது திரைப்பட கல்லூரி என்றுதான் இருந்தது. அந்த பெயர் மாற்றப்படவில்லை.

என் தாயார் பெயரில் போக்குவரத்துக் கழகத்துக்கு பெயர் சூட்டியதாக கூறுவதும் தவறானது. இதற்கு பொன்முடி பொறுப்பு ஏற்பாரா?

அமைச்சர் பரிதி இளம் வழுதி:- தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா பல்கலைக்கழகத்துக்கும் நானே வேந்தர் என்று அறிவித்தீர்களே?

ஜெயலலிதா:- அமைச்சர் பரிதி இளம் வழுதி கூறுவதும் முற்றிலும் தவறான குற்றச் சாட்டு. அவரும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். தெரிந்தே உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்கிறார்கள்.

அவர்களது சவால்களை நான் ஏற்க வேண்டியதில்லை. அவர்கள் தவறான தகவல் சொல்வதால் அவர்கள்தான் அரசியலை விட்டு விலக வேண்டும்.
பொன்முடி:- உங்கள் ஆட்சியில் உங்கள் பெயரை சூட்டியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க நான் தயாராக உள்ளேன்.

ஜெயலலிதா:- மொத்தத்தில் இருக்கிற முதல்- அமைச்சர் பெயரை ஒரு திட்டத்துக்கு சூட்டுவது பொருத்தம் இல்லாதது.இங்கு பேசிய உறுப்பினர் கொடை நாட்டில் சென்று நான் தங்குவதாக குறை சொல்கிறார். கொடை நாட்டில் நான் தங்குவதில் என்ன தவறு உள்ளது. அது தமிழ்நாட்டில்தானே இருக்கிறது. முதல்- அமைச்சரும், பொன்முடியும் சென்று பெங்களூரில் போய் தங்குகிறீர்களே? அது என்ன தமிழ் நாட்டிலா உள்ளது?

(துரைமுருகன் பேச எழுந்தார். இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

துரைமுருகன்:- நீங்கள் ஆந்திராவில் திராட்சை தோட்டத்துக்கு சென்று தங்கினீர்களே? அது என்ன தமிழ்நாட்டிலா உள்ளது.

ஜெயலலிதா:- இப்படி குறுக்கீடு செய்து கொண்டே இருந்தால் நான் எப்படி பேசுவது! அற்ப விஷயங்களுக்கு எல்லாம் பேசி எதிர்க்கட்சி தலைவரின் நேரத்தை வீணடிக்கிறீர்களே?

துரைமுருகன்:- வழக்கமாக எதிர்க்கட்சி தலைவர் பேசிவிட்டு உடனே சென்று விடுவார். அதனால்தான் இப்போதே சொன்னேன். அற்பத்தனமாக பேசியதாக சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் எப்படி பேசுகிறாரோ அதே பாணியில்தான் நானும் பேசினேன்.

(அப்போது அ.தி.மு.க.- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து கூச்சலிட்டனர்)

சபாநாயகர்:- நீங்கள் கவர்னர் உரை மீது பேசுங்கள்.

ஜெயலலிதா:- நான் கவர்னர் உரை மீதுதானே பேசுகிறேன். முதலில் அவர்களை உட்காரச் சொல்லுங்கள்.

பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்ததாக கூறினார். எங்கள் ஆட்சியில்தான் முதலில் இதை அறிமுகம் செய்தோம். முதலில் 3 ஆணையாளர்களையும் நியமனம் செய்தேன்.

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து குண்டம் சட்டம் பாயும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். எனது ஆட்சியில் திருட்டு வி.சி.டி.யை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தேன்.2004-ல் திருட்டு வி.சி. டி.யை தடுக்க சட்டத்தில் குண்டர் சட்டத்தை சேர்த்தது நான்தான். இதனால் திருட்டு வி.சி.டி. தொழில் நிறுத்தப்பட்டது.

2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திருட்டு வி.சி.டி. மீண்டும் கொடிகட்டி பறக்கத் தொடங்கிவிட்டது. மதுரை, சென்னையில் உள்ள அதிகார மையம் இதை நடத்துகிறது.

தமிழ்நாட்டில் திரைப்பட துறையினர் முதல்வருக்கு அடுத்த மாதம் பாராட்டு விழா நடத்துகிறார்களாம். திருட்டு வி.சி.டி.யை ஒழித்ததற்கு பாராட்டு விழாவாம். அப்படி பாராட்டு விழா நடத்துவதாக இருந்தால் எனது தலைமையிலான ஆட்சி எடுத்த முடிவுக்குத்தான் பாராட்டாக அமையும். வேறு எதற்கு பாராட்டு?

(அப்போது குறிக்கிட்டுப் பேச பரிதி இளம் வழுதி எழுந்தார்)

ஜெயலலிதா:- என்னங்க இது ரன்னிங் கமென்டரி மாதிரி... ஒவ்வொன்றுக்கும் எழுந்திருக்கிறார்.

பரிதிஇளம்வழுதி:- திருட்டு வி.சி.டி.க்கு தி.மு.க. வின் அதிகாரமையம்தான் காரணம் என்று பேசுகிறார். நீங்கள் அந்த தொழிலை செய்ததால் உங்கள் ஆட்சியில் அந்த தொழில் இல்லை. (அ.தி. மு.க.வினர் எழுந்து கடும் கூச்சல்)

ஜெயலலிதா:- பரிதி இளம்வழுதி தன் தரம் தாழ்ந்த பேச்சுக்களை பேசுகிறார். இதை சொல்ல அவருக்கு தகுதி இல்லை.

சபாநாயகர்:- நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்க வேண்டும் (இதற்கும் அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

பரிதிஇளம்வழுதி:- நீங்கள்தான் தரம் தாழ்ந்து அற்பத்தனமாக பேசுகிறீர்கள்.
ஜெயலலிதா:- (பரிதியை பார்த்து) அவர் அவ்வளவுதான். உங்கள் பேச்சுக்கு பதில் சொல்வதே தவறு. (அதற்குள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் இருவரும் இருக்கையை விட்டு எழுந்து முன் வரிசைக்கு ஓடி வந்தனர்)

சபாநாயகர்:- நீங்கள் இருவரும் உங்கள் இருக்கையில் சென்று அமருங்கள். (இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது)

ஜெயலலிதா:- ஆளும் கட்சி உறுப்பினர்கள் தன்னை புகழ்ந்து பேசவேண்டாம் என்று முதல்வர் கூறியுள்ளார். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆளும் கட்சியினர் புகழ்வது மட்டும் அவருக்கு பிடிக்காது போலும். தமிழ் திரைப்பட கலைஞர்கள் புகழ்ந்து பேசினால்தான் முதல்வருக்கு பிடிக்கும்போலும்.

அமைச்சர் அன்பழகன்:- திரைப்பட கலைஞர்கள் புகழ்ந்தால்தான் பிடிக்கும் என கூறுவது எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் உள்ளது.

ஜெயலலிதா:- இலவச கான்கிரீட் வீடுகள் 21 லட்சம் பேருக்கு கட்டித்தரப் போவதாக அறிவித்துள்ளீர்கள். முதல் கட்டமாக 3 லட்சம் வீடு கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு வீட்டுக்கு ரூ. 60 ஆயிரம் என்றாலும் இவ்வளவு வீடுகளையும் கட்ட 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் தேவைப்படும். இந்த திட்டம் ஏழைகளுக்கு நல்ல திட்டம்தான். இந்த திட்டத்துக்கு எங்கிருந்து பணம் வரப்போகிறது? சொந்த பணத்தில் இருந்து செலவு செய்வார்களா? (இப்படி சொல்லி விட்டு ஜெயலலிதா மேலும் ஒரு வார்த்தையை சொன்னார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜெயலலிதா பேசிய அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்)

அமைச்சர் அன்பழகன்:- ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு போடும்போதும், இதற்கு பணம் எங்கிருந்து வரும் என்று கேட்டீர்கள். ஆனாலும் கலைஞர் ஆட்சியில் 2 ரூபாய்க்கு மட்டுமல்ல, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு பணம் எப்படி வருகிறதோ... அதே போல இலவச வீடு கட்டும் திட்டத்துக்கும் பணம் வரும். வீடுகளை கட்டிக் கொடுப்போம்.ஜெயலலிதா:- தமிழ்நாட்டில் தற்போது 83 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. இதற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டியதுள்ளது. தற்போது கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிவிட்டது. இதனால் மாதாந்தோறும் 20 ஆயிரம் கோடி வட்டி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இதற்கு காரணம் பயன் உள்ள திட்டங்களுக்கு செலவு செய்யாமல் எந்த பயனும் இல்லாத இலவச திட்டங்களுக்கு செலவு செய்வதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க.வின் தவறான கொள்கைகளால் வருவாய் இழப்பும், வரிச்சுமையும் வேலை இல்லா திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் பல மடங்கு அதிகரித்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி விகிதம் 11.85 சதவீதமாக இருந்தது.

தற்போது நமது வளர்ச்சி விகிதம் 4.55 சதவீதமாக குறைந்துவிட்டது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநில வளர்ச்சி கூட பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி கடை கோடியில் உள்ளது.
நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமை எத்தனை கோடி?

21 லட்சம் இலவச வீடுகள் கட்ட பணம் எப்படி வரும்?

தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது ஏன்?

55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 306 ஏக்கர் நிலம் மட்டுமே இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் - அமைச்சர் கருணாநிதி:- 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக முன்பு ஆட்சி செய்த அ.தி.மு.க. பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. அது உண்மை என்று நம்பி அதை நாங்கள் ஏழை- எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாக சொன்னது உண்மை.

ஜெயலலிதா:- 55 லட்சம் ஏக்கர் அரசு தரிசு நிலம் இருப்பதாக நாங்கள் சொல்லவில்லை. பட்டா மற்றும் தரிசு நிலங்களை பண்படுத்தி கொடுப்போம் என்றுதான் கூறினோம்.

கருணாநிதி:- 55 லட்சம் ஏக்கர் பண்படுத்தப்பட்டால் அதை பாமரர்களுக்கு கொடுக்கலாம் என்று எண்ணிதான் நாங்கள் அறிவித்தோம்.


ஜெயலலிதா:- அந்த நிலம் அரசிடம் இருக்கிறது என்று நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் கொடுப்பதாக சொன்ன நிலத்தை எப்போது பகிர்ந்து கொடுக்க போகிறீர்கள்?

அன்பழகன்:- 53 லட்சம் ஏக்கர் நிலம் எங்கே உள்ளது என்று காட்டுங்கள். நாங்கள் பிரித்துக் கொடுக்கிறோம்.

ஜெயலலிதா:- அரசு காலி பணி இடங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதால் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக வேலைக்கு தேர்வு செய்யப்பட உள்ள 2 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும்.

அன்பழகன்:- 2 லட்சம் காலி இடங்களுக்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் சொல்லப்படவில்லை. புதிதாக இளைஞர்களை நியமித்த பிறகு நிரப்பப்படாமல் உள்ள ஓரிரு இடங்களில் மட்டும் தற்காலிகமாக ஓய்வு பெற்ற ஊழியர்களை நியமிக்கலாம் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா:- தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு வானத்தை நோக்கி செல்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் நல்ல பொருளா தார கொள்கைகளை கடைபிடித்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் தவறான கொள்கைகள் கடை பிடிக்கப்பட்டு கடன்கள் வாங்கப்படுகின்றன. இந்த கடன்களை திருப்பி செலுத்த முடியுமா? என்ற நிலை உருவாகி உள்ளது.தேர்தலில் ஓட்டுப்போட ஒருவர் 5 ஆயிரம் ரூபாய் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். என் ஆட்சியில் 30 ரூபாய்க்கு சர்க்கரை வாங்கலாம். தற்போது 90 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியது உள்ளது. இப்படி 5 வருடத்துக்கு கணக்கிட்டால் ரூ. 3,500 சர்க்கரைக்கு மட்டுமே அதிகமாக கொடுக்க வேண்டியது உள்ளது. மற்ற அத்தியாவசிய விலையும் பல மடங்கு உயர்ந்து இருப்பதால் அவர் வாங்கிய பணத்தை விட 5 மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டியது இருக்கிறது.

எனவே கவர்னர் உரையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது பற்றி எதுவும் சொல்லவில்லை. ரேஷன் கடைகளில் 50 ரூபாய்க்கு 10 மளிகை பொருள் கொடுப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். 1 மாதத்திலேயே நிறுத்தப்பட்ட இல்லாத திட்டத்தை சொல்லி இருக்கிறீர்கள்.

அமைச்சர் எ.வ.வேலு:- 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி மட்டும் அல்ல பருப்பு, உளுந்து போன்ற பலப் பொருட்களை சலுகை விலையில் கொடுக்கிறோம். 50 ரூபாய்க்கு 10 மளிகை பொருள் கொடுக்கும் திட்டம் இப்போதும் இருக்கிறது. முன்னாள் முதல்- அமைச்சர் கடைக்கு செல்லாததால் இது தெரியவில்லை.
ஜெயலலிதா:- ரவை, கோதுமை மாவு என்று எதை கேட்டாலும் இருப்பில் இல்லை என்றுதான் பதில் வருகிறது. அதுதான் உண்மை.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. உச்சக்கட்டமாக இப்போது காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. சமீபத்தில் நெல்லை அம்பாசமுத்திரம் அருகே காவல் ஆய்வாளர் வெற்றிவேல் வெடிகுண்டு வீசப்பட்டு, அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. அந்த நேரத்தில் அங்கு நின்ற தி.மு.க. அமைச்சர்கள், ஆட்சி தலைவர் ஆகியோரும் (ஜெயலலிதா ஒரு வார்த்தையை கூறினார். அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் விளக்கம் அளித்தனர்)

ஜெயலலிதா:- யாருமே உதவி செய்யாதது மனிதாபிமானம் இல்லாத செயல்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்:- எதிர்க்கட்சி தலைவர் சொல்வது தவறான தகவல். இவர் நேரில் பார்த்தாரா?

(இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். ஆளுங்கட்சி தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஒரே கூச்சலாக இருந்தது. ஜெயலலிதா மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை கூறினார்.

துரைமுருகன்:- உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு. ஒரு நிகழ்ச்சி எதிர்பாராமல் நடக்கிறது. கொலையாளிகளை போலீசார் விரட்டி செல்கிறார்கள். வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் ஏழு, எட்டு வெடிக்காமல் கிடக்கின்றன. அங்கு வந்த சுகாதார அமைச்சர் போன் செய்து கொண்டு இருக்கிறார்.

அமைச்சர் மைதீன்கானும் பாதுகாப்புக்காக வந்த போலீஸ் ஜீப்பில் காயம்பட்ட ஆய்வாளரை ஏற்றி டாக்டரையும் அனுப்பி வைக்கிறார். இவ்வளவு உதவியும் செய்த பிறகு ஜெயலலிதா குற்றஞ்சாட்டுகிறார். (அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்)

சபாநாயகர்:- அமைச்சர் விளக்கம் அளித்த பிறகும் ஒரே பிரச்சினை பற்றி தொடர்ந்து பேசுகிறீர்கள். வேறு வேறு பிரச்சினைக்கு வாருங்கள். (மீண்டும் ஜெயலலிதா இந்த பிரச்சினையை பேசினார்)

அமைச்சர் மைதீன்கான்:- அங்கு காயம் பட்டு கிடந்தவருக்கு சிகிச்சை அளிக்க உடனடி ஏற்பாடு செய்து என் வாகனத்தில் என் உதவியாளரை வைத்து ஏற்றி அனுப்பினேன். அவர் காலில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் எங்களுக்கு கிடைத்த சால்வை மூலம் கட்டுப்போட சொன்னோம். மதியம் 2.50 மணி வரை அம்பாசமுத்திரம் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு பாளையங்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டார். மனிதாபிமானம் அடிப்படையில் நாங்கள் செய்ததை கொச்சைப்படுத்த வேண்டாம். மனசாட்சி இல்லாதவர்கள்தான் இப்படி சொல்வார்கள்.

அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம்:- உங்கள் ஆட்சியின் போது மகாமகம் குளத்தில் 100 பேர் மூழ்கி செத்தார்களே, நீங்கள் காப்பாற்றினீர்களா?

அமைச்சர் துரைமுருகன்:- மகாமகம் குளத்தில் 100 பேர் செத்தார்கள். அப்போது இவர்கள் ஓடிப்போய் காப்பாற்றினார்களா? அதுபற்றி பதில் சொல்லத்தயாரா?

ஜெயலலிதா:- நான் முதல்- அமைச்சராக இருந்தபோது வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படைக்கு தவைராக இருந்த தேவாரம் காயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி நல்ல சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து நேரில் சென்று அவருக்கு ஆறுதலும் கூறினேன்.

(அதற்கு எதிராக ஆளுங்கட்சியினர் குரல் கொடுத்தனர். அதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கூச்சல் குழப்பமாக இருந்தது).

துரைமுருகன்:- வால்டர் தேவாரம் பற்றி கேட்கவில்லை. மகாமகம் குளம் பற்றி கேட்கிறோம்.

ஜெயலலிதா:- ஒருவர் காயம்பட்டு உயிருக்கு துடித்து கொண்டிருக்கிறார் உயிருக்கு போராடும் அவர் தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் பாட்டிலை எடுத்து வீசுகிறார்கள். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம்.

துரைமுருகன்:- அவர் துடிதுடித்தை நானும் டி.வி.யில் பார்த்தேன். அமைச்சர்களுடன் சென்ற அதிகாரிகள்தான் அவரை வாகனத்தில் ஏற்றினார்கள். யாரும் போகவில்லை என்று சொல்வது அபாண்டம்.
(தொடர்ந்து இதே குற்றச்சாட்டை கூறிய ஜெயலலிதா சில கோரிக்கைகளை வைத்தார். அவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன)

தொடர்ந்து பேசிய ஜெயலலிதா விலைவாசி உயர்வு, மின்சார பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பேசினார். பல்வேறு திட்டங்கள் பற்றியும் குறை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் அடுத்து ஆட்சிக்கு வருவோம் என்று கணக்கு போட்டு 21 லட்சம் வீடுகள் கட்டுவதாக சொல்லி இருக்கிறார்கள். மக்களை எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தொண்டாற்றுவோம் என்று கூறிவிட்டு அவையில் இருந்து ஜெயலலிதா வெளியே சென்றார். அவருடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களும் சென்றனர்.

அமைச்சர் அன்பழகன்:- எதிர்கட்சி தலைவர் 1 மணி நேரம் பேசினார். அவருடைய கருத்துக்களை மறுத்து உண்மையான புள்ளிவிவரங்களை சொல்லலாம் என்று இருந்தேன். அதற்குள் வெளியே சென்றுவிட்டார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment