Thursday, January 7, 2010

2,200 கோடியில் தொழிற்சாலை -மத்திய அமைச்சர் அழகிரி



"மத்திய அமைச்சர் அழகிரியின் முயற்சியால், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, கவர்னர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது: தென் மாவட்டங்களை தொழில்மயமாக்குவதன் மூலம், அங்கு நிலவும் சமூகப் பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என, தமிழக அரசு நன்றாக உணர்ந்துள்ளது. அதனால், தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளை நிறுவ முன்வருவோருக்கு, கூடுதல் சலுகைகள் அடங்கிய, "தொகுப்புச் சலுகைகள்' வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.


இதன் பயனாக, "வீடியோகான்' நிறுவனம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் கலர் "டிவி' மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளது. தமிழ்நாடு கனிம நிறுவனம், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கருங்கல் வெட்டுதல் மற்றும் மெருகேற்றும் பிரிவை துவக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் முயற்சியால், இந்தோனேஷியா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு தொழில் நிறுவனம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் டிராக்டர்கள், ஸ்டீல் அலாய்ஸ், போர்ஜிங்ஸ் ஆகியவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவ முன்வந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டானில், ஏ.டி.சி., டயர்ஸ் என்ற நிறுவனம், கடந்த மாதம் உற்பத்தியை துவக்கியுள்ளது. இவ்வாறு கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment