Tuesday, January 5, 2010

முதல்வர் கலைஞரின் கேள்வி பதில்கள்


கேள்வி:- கரும்பு டன் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்று கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் தமிழக அரசு ரூ.1,437 என்று மட்டுமே விலை நிர்ணயித்திருப்பதாகவும் என்.வரதராஜன் கூறியிருப்பது பற்றி?.

பதில்:- தமிழக அரசு ரூ.1,437 என்று மட்டுமே ஒரு டன் கரும்புக்கு விலை நிர்ணயம் செய்திருப்பதாகச் சொல்லியிருப்பதே தவறு. 2009-2010 அரவைப் பருவத்திற்கு மாநில அரசின் பரிந்துரை விலையினை நிர்ணயம் செய்து 29-9-2009 அன்று அரசாணை எண் 190 பிறப்பிக்கப்பட்டது. 2009-2010 அரவைப் பருவத்திற்கு 9.5 சதவீதம் சர்க்கரைக் கட்டுமானமுள்ள கரும்புக்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச சட்டப்பூர்வ விலையாக ரூ.1,077-60 என்று மத்திய அரசு நிர்ணயம் செய்திருந்தது. (இந்தத் தொகை பின்னர் மத்திய அரசினால் சற்று அதிகரிக்கப்பட்டது. அந்தத் தொகை தமிழக அரசு கொடுத்து வரும் தொகையை விடக் குறைவுதான்) சர்க்கரைக் கட்டுமானம் அதிகமாகும் ஒவ்வொரு 0.1 சதவீத கட்டுமானத்திற்கும் டன் ஒன்றுக்கு ரூ.11.30 ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு இதனைக் கவனமாக பரிசீலித்து, தமிழக கரும்பு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச விலையைவிடக் கூடுதலாக ரூ.359.80 உயர்த்தி, 9.5 சதவீதம் சர்க்கரைக் கட்டுமானம் உள்ள கரும்புக்கு டன் ஒன்றுக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.1,437.40 என்று நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டது.

மேலும் 9.5 சதவீதம் சர்க்கரை கட்டுமானத்திற்குக் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 0.1 சதவீத சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.11.30 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

கரும்பு விவசாயிகளின் நலனிலே மேலும் அக்கறை கொண்டு, மாநில அரசின் பரிந்துரை விலையுடன் சராசரி வாகன வாடகை டன் ஒன்றுக்கு ரூ.90, மற்றும் கூடுதல் கட்டுமானம் அடிப்படையில் அளிக்கப்படும் சராசரி ஊக்கத் தொகை ரூ.22.60-ஐ சேர்த்து 2009-2010 அரவைப் பருவத்திற்கு கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு தற்போது ரூ.1,550 கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே என்.வரதராஜன் 1,437 ரூபாய் என்று சொல்லியிருப்பது சரியான தகவல் அல்ல.

2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைந்த போது 9-11-2001-ம் நாள் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலை மட்டும் தரப்படும், மாநில அரசின் பரிந்துரை விலையை வழங்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு ஜெயலலிதா தெரிவித்தார்.

அ.தி.மு.க. அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி 2001-2002 முதல் 2004-2005 வரை நான்காண்டு காலம் மத்திய அரசின் சட்டபூர்வ குறைந்தபட்ச விலையான ரூ.795 மட்டும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

உச்சநீதி மன்றம் கரும்பு விலை நிர்ணயம் சம்பந்தமாக அளித்த தீர்ப்பில் மத்திய அரசின் சட்டபூர்வ குறைந்தபட்ச விலையோடு மாநில அரசு கூடுதலாக பரிந்துரை வழங்கலாம் என 5-5-2004 அன்று தீர்ப்பு வழங்கிய பிறகு, அந்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தாமல், அதன் பிறகு 16 மாத காலம் சும்மாயிருந்துவிட்டு, 2006-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு ஒரு டன் கரும்புக்கு 1014 ரூபாய் என்று ஜெயலலிதா ஆட்சியிலே அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதே தவிர அந்தத் தொகை வழங்கப்படவில்லை.

அதனால் அந்த நான்காண்டுகளுக்கு மட்டும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் ஏறத்தாழ ரூ.440 கோடி என்பதை என்.வரதராஜன் வசதியாக மறந்துவிட்டு - இடைத் தேர்தலில் அந்த ஜெயலலிதா கட்சியின் வேட்பாளருக்காக தனியாக மேடை போட்டு பிரசாரம் செய்ததை மறக்க முடியவில்லை.

கேள்வி:- கரும்பு விலை ரூ.1,437 என்று தமிழகத்தில் விலை நிர்ணயம் செய்திருப்பது இதர மாநிலங்களைக் காட்டிலும் மிகக் குறைவான தொகையா?.

பதில்:- மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஆந்திராவிலும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு தமிழகத்தை விட அதிக கொள்முதல் விலை தருவதாக என்.வரதராஜன் அவரது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். ஆனால் அதிக அளவிற்கு கரும்பு உற்பத்தி செய்யக் கூடிய மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களிலே மாநில அரசின் சார்பாக எந்தப் பரிந்துரை தொகையையும் நிர்ணயம் செய்து தருவதில்லை என்பது தான் நமது அரசுக்குக் கிடைத்த உண்மையான தகவல் என்பதை மாத்திரம் தெரிவிக்க விரும்புகிறேன்.

கேள்வி:- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, அபராத நிலுவையை முழுமையாகச் செலுத்தினாலும், மானிய உதவி கிடைக்கும் வரை உற்பத்தி நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறதே?.

பதில்:- திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடை தொழிலையொட்டி உருவான சாயப்பட்டறைகளால் வெளியான கழிவு நீர், சுத்திகரிப்பு செய்யாமல் நொய்யல் ஆற்றில் விடப்பட்ட காரணத்தால், ஆற்று நீரும் மற்றும் ஆற்றுக்கு அருகில் உள்ள விளை நிலங்களும் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு நீதிமன்றம் வரை செல்ல நேரிட்டது. நீதிமன்றத்தில் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சார்பாக எந்தவித கழிவு நீரும் ஒரு சொட்டு கூட வெளியேறாதவாறு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்தார்கள்.

அதனையேற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் 31-7-2007-க்குள் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று உத்தரவிட்டு - இதுவரை மண்ணையும், நீரையும் மாசுபடுத்தியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவும் கூடுதலாக அபராதத் தொகையும் விதித்தார்கள். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சாயப்பட்டறை உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.

அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகள் நடைபெற்றது. இறுதித் தீர்ப்பில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் விதித்த அபராதத் தொகை அனைத்தையும் செலுத்தி, 6-1-2010-க்குள் முழுமையாக சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து ஒரு சொட்டு கழிவு நீர் கூட வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவின்படி சாயப் பட்டறைகளின் கழிவு நீரை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை வங்கியின் கடன் உதவியோடும், மற்றும் தங்களுடைய சொந்தச் செலவிலும் கடந்த ஆறேழு ஆண்டுகளாக சாயப் பட்டறை உரிமையாளர்கள் மேற்கொண்டார்கள்.


அப்போதைய அரசிடமிருந்து எவ்வித நிதி உதவியும் இவர்கள் பெற முடியவில்லை. 2006-ம் ஆண்டு மே திங்களில் தமிழகத்தில் ஆட்சி அமைந்த பிறகு, பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட நிதி உதவி அளிக்கவேண்டுமென்று இந்தியப் பிரதமருக்கு நான் கடிதங்கள் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக துணை முதல்வர் தம்பி மு.க.ஸ்டாலினும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தம்பி தயாநிதிமாறனும் இந்தியப் பிரதமரையும், மத்திய நிதி அமைச்சரையும் நேரில் சந்தித்து இப்பிரச்சினை குறித்து வலியுறுத்தியிருக்கிறார்கள்.


இவ்வாறு எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனாக, மத்திய அரசு, இதுவரை பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க சாயப்பட்டறை உரிமையாளர்கள் செலுத்திய வட்டித் தொகையான ரூ.100 கோடியை, வங்கிக் கடனுக்கு ஈடாக சரிசெய்துகொள்ள மத்திய அரசு முன்வந்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் துணை முதல்-அமைச்சர் தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் மத்திய அமைச்சர் தம்பி தயாநிதி மாறன், அமைச்சர்கள் தம்பிகள் பொங்கலூர் பழனிச்சாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், மைதீன்கான் ஆகியோர் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள் திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்களுடன் கலந்து பேசியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் தனது பங்காக ரூ.120 கோடி மானியம் வழங்க முன் வந்துள்ளது.


இவ்வளவிற்கும் பிறகு சாயப் பட்டறை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருத்தத்தை அளிக்கக் கூடிய ஒரு செயலாகும். எனினும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தும்போது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, தீர்ப்பின் அடிப்படையில் தேவையான உதவிகளைச்செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment