Tuesday, February 2, 2010

டெல்லி செல்கிறார் துணை முதல்வர் மு க ஸ்டாலின்


நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.


இதைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒரு வழிமுறையை கண்டறிவது குறித்து விவாதிக்க, புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஜனவரி 27-ந் தேதியன்று, அனைத்து மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மறுநாளில், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக இந்த கூட்டம் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது.


இந்தநிலையில், வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டெல்லியில் பிரதமர் தலைமையில் முதல்-மந்திரிகள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகம் சார்பில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 6-ந் தேதி நடைபெறும் முதல்நாள் கூட்டத்தில், விலைவாசி உயர்வு பற்றி அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.


இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பேசுகிறார்கள். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதில் பேசுகிறார்.


மறுநாள் 7-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய முக்கிய விவாதத்தை பிரதமர் மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்புக்கென தனி அமைச்சகத்தை அமைப்பது, தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முதல்-மந்திரிகளின் கருத்துக்கள் கேட்கப்படும்.


நக்சல்கள் ஒழிப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, கடலோர பாதுகாப்பு, உளவு தகவல்களை திரட்டுதல், அவற்றை மத்திய-மாநில உளவுத்துறையினர் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றியும் பேசப்படும். இந்த இரண்டாவது நாள் கூட்டத்திலும் அனைத்து முதல்-மந்திரிகளும் பேசுகிறார்கள்.

No comments:

Post a Comment