Tuesday, February 9, 2010

முதல்வர் கருணாநிதிக்கு 'திருக்குறள் பேரொளி' விருது

முதல்வர் கருணாநிதியின் திருக்குறள் பணிகளைப் பாராட்டி "திருக்குறள் பேரொளி' விருதை உலகத் திருக்குறள் பேரவை அமைப்பு வழங்குகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அதற்கான விழா பிப்ரவரி 10-ல் நடைபெறும்.

இது குறித்து உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னையில் வள்ளுவர் கோட்டம்,​​ குமரி முனையில் வள்ளுவருக்கு 133 அடி சிலை,​​ பெங்களூரில் திறக்கப்படாமல் இருந்த வள்ளுவர் சிலையைத் திறந்தது,​​ 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு பொற்கிழி பரிசு ஆகியவை முதல்வர் கருணாநிதியின் அரிய சாதனையாகும்.

திருக்குறளைப் பொறுத்தவரை எழுத்து,​​ சொல்,​​ செயல் என்று மூன்று விதமான சேவைகளையும் முதல்வர் கருணாநிதி செய்துள்ளார்.​ செய்தும் வருகிறார்.

அவரது இந்த அரிய பணிகளைப் பாராட்டி "உலகத் திருக்குறள் பேரவை' அமைப்பு சார்பில் "திருக்குறள் பேரொளி' என்ற விருதினை வழங்க உள்ளோம்.அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதன்கிழமை ​(பிப்ரவரி 10) நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.​

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள்,​​ குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.​ கோகுலகிருஷ்ணன்,​​ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.

விழாவில் கருணாநிதியின் திருக்குறள் பணிகள் பற்றி திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி மாணவர்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.​ குன்றக்குடியைச் சேர்ந்த இரண்டு கால்களும் ஊனமுற்ற சக்திவேல் என்ற இளைஞர் வரைந்த கருணாநிதியின் ஓவியங்கள் நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்படும் என்றார் பொன்னம்பல அடிகளார்.

No comments:

Post a Comment