Thursday, February 11, 2010

நன்றி பாராட்டாத இடதுசாரிகள்


தீண்டாமை என்ற கடும் விஷத்தை, நாட்டில் ஒரு துளி கூட இல்லாமல் துடைத்தெறிய இயலவில்லை என்பதை, இன்றைய நாட்டுநடப்பு காட்டி வருகிறது. ஜாதிக் கொடுமைகள், தீண்டாமைத் தீமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, இன்னும் தலை நிமிர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற ஊர்களில், எந்த ஆட்சியிலும் ஊராட்சித் தேர்தல்களைக் கூட நடத்த முடியாமல் இருந்தது. நடந்தால் தலைவர்களாக தலித்கள் தான் வர முடியும் என்பதால், அவர்கள் உயிரோடு இருக்க முடியாத நிலை. இந்த சகிக்க முடியாத கொடுமையை அகற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு என்பதை நினைத்துப் பார்த்து, 2006ம் ஆண்டு அந்த ஊர்களில் ஊராட்சித் தேர்தலை நடத்தி, அதில் வென்றவர்களை சென்னை கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்து பாராட்டி, பரிசு வழங்கினோம்.

மதுரையை அடுத்த உத்தபுரத்தில், தலித்கள் தாண்டிச் செல்லக் கூடாது என்பதற்காக, உயர் வகுப்பினர் கட்டியிருந்த சுவரை, கலெக்டரையும், போலீசாரையும் போனில் அழைத்துப் பேசி, இடிக்கச் செய்து, ஜாதி வெறியைத் தணித்தோம். அதைப் போலவே, கோவையில் உள்ள பெரியார் நகரில், 20 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் வசிக்கிற பகுதியில், எழுப்பப்பட்டிருந்த சுவர் அகற்றப்பட்டது. தலித்களை விட மோசமான நிலையில் அவமதிக்கப்பட்ட அருந்ததிய மக்களை, அடித்தளத்தில் வீழ்ந்து கிடக்கிற சூழலில் இருந்து கைதூக்கிவிட, அவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தோம். கட்சிகள் சிலவற்றின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நடைமுறைப்படுத்தினால், கோரிக்கைகளை வைத்த கட்சிகள், தங்களுக்குத் தாங்களே நன்றி பாராட்டிக் கொள்வதும், கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசின் செயலை இருட்டடிப்பு செய்வதும், தங்கள் நிரந்தர சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்றாகப் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றன.

விருந்திட்டோர்க்கு நன்றி கூறாமல், விருந்தை அருந்தியவர்களுக்கு நன்றியும், பாராட்டும் கூறி, நடமாடிக் கொண்டிருப்பவர்களை வாழ்த்துவோம், வணங்குவோம். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment