Sunday, February 21, 2010

ஜெயலலிதாவின் திசை திருப்பும் நாடகம்


தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. மதவாதத்துக்கும் தீய சக்திகளுக்கும் எதிராக உருவானதுதான் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி. இந்த கூட்டணியை உடைத்து விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.

தி.மு.க.விடம் இருந்து காங்கிரசை பிரித்து விட்டு, பிறகு காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுத்தி விடலாம் என்று ஜெயலலிதா கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவரது பகல் கனவு ஒரு போதும் பலிக்கப்போவது இல்லை. அவர் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் கூட தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும். அந்த தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றிகளைக் குவித்து சாதனை படைக்கும்.

சமீப காலமாக அ.தி. மு.க.வில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், கட்சி மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள், ஜெயலலிதாவின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்து, அவரிடம் இருந்து விலகி வருகிறார்கள். இதனால் விரக்தி அடைந்துள்ள ஜெயலலிதா, இதுபற்றி மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக திசை திருப்பும் நடவடிக்கையாக காங்கிரசுடன் கூட்டணி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்றவையும் கூட மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல்தான்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வெளி நாட்டைச் சேர்ந்தவர் என்று முன்பு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். கூட்டங்களில் எல்லாம் சோனியா வெளிநாட்டுக்காரர் என்றார். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஜெயலலிதா இப்போது என்ன சொல்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன்.

யூரியா உர விலை உயர்வு பிரச்சினை காரணமாக தி.மு.க.-காங்கிரஸ் உறவில் உரசல் ஏற்பட்டிருப்பதாக சொல்வதெல்லாம் பத்திரிகைகளின் யூகங்களாகும். இந்த உர பிரச்சினை பற்றி சரியாக சொல்ல வேண்டுமானால் இது தி.மு.க. - காங்கிரஸ் உறவை பலப்படுத்தும் உண்மையான உரமாக உள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் கலைஞர் கூறினார்.

No comments:

Post a Comment